Local body Election | ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளையும் கைப்பற்றுவோம் - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நம்பிக்கை
’’திமுகவின் வேதனைகளையும், எங்கள் ஆட்சியின் சாதனைகளையும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க போகிறோம்’’
ராமநாதபுரம் நகராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேசுவரம் ஆகிய நகராட்சிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 4 நகராட்சியையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்ட அளவில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளை தி.மு.க.வும், திருவாடானை தொகுதியை காங்கிரசும் கைப்பற்றிய நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, ம.நீ.ம. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியை கைப்பற்ற முக்கிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
நகராட்சி தலைவரை வார்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பதால் கட்சியில் சீட்டு கிடைக்காவிட்டாலும் வார்டில் கணிசமான ஆதரவாளர்களையும், உறவினர்களையும் வைத்துள்ள கட்சி நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில் தயாராக உள்ளனர். ஆகவே இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பெருமைவாய்ந்த ராமநாதபுரம் நகராட்சியின் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்ற கேள்விக்கு வாக்குகள் மூலம் மக்கள் விடை கொடுக்க தயாராகி வருகின்றனர்.
'எங்கள் சாதனையும் திமுக அரசின் வேதனையும்'
எங்கள் ஆட்சியின் சாதனையை சொல்லியும், திமுக ஆட்சியின் வேதனைகளை சொல்லியும் வாக்கு கேட்க போகிறோம்.. எல்லா பகுதியிலும் அபாரமாக வெற்றி பெறுவோம் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்குள்ள 33 வார்டுகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை பெறுவதற்கான முனைப்பை காட்டி வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவதையடுத்து, ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 30 வது வார்டில் போட்டியிடும் நகரசபை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக உள்ள என்.ஆர்.பால்பாண்டியன் மற்றும் 19 வது வார்டில் போட்டியிடும் மகளிரணி இணைச் செயலாளராக உள்ள நாகஜோதி உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமையில் நேற்று தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறுகையில்.,
ராமநாதபுரத்தில் உள்ள 33 வார்டுகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.. ஏனென்றால், எங்களுடைய அதிமுக ஆட்சியில் இந்த மாவட்ட மக்களுக்கு அனைத்து வகையான திட்டங்களையும் செய்து தந்துள்ளோம். நான் அமைச்சராக இருந்தபோதும்சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம்.பல வருடமாக முடிக்கப்படாமல் இருந்த திட்டங்களை நாங்கள்தான் செயல்படுத்தினோம். மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி உள்ளோம். சாலைகளை சீரமைத்துள்ளோம்.
அவ்வளவு ஏன், 30 ஆண்டு காலமாக செய்யாததை எல்லாம் எங்கள் ஆட்சியில்தான் செய்து தந்துள்ளோம்.. எல்லா ஏரிகளையும் தூர்வாரி மொத்த நீர்நிலைகளையும் நிரப்பி வைத்துள்ளோம்., ராமநாதபுரத்தில் இப்போது தண்ணீர் பிரச்சனையே கிடையாது. ஆனால், திமுக ஆட்சிக்கு எட்டு மாதத்திலேயே எவ்வளவு மோசமான ஆட்சி என்று தெரிந்துவிட்டது. திமுகவின் வேதனைகளையும், எங்கள் ஆட்சியின் சாதனைகளையும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க போகிறோம். நிச்சயம் 33 வார்டுகளிலும் வெற்றி பெறுவோம்'
ஆகவே, அதிமுகவைச் சேர்ந்தவரே ராமநாதபுரம் நகரசபை தலைவராக வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
'மும்முரம் காட்டும் திமுக'
ராமநாதபுரம் நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் இருபத்தி மூன்று வேட்பாளர்களும் நேற்று மாவட்ட பொறுப்பாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கூட்டணியே வென்றது.இதே உற்சாகத்துடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ராமநாதபுரம் மாவட்ட திமுக தயாராகி வருகிறது.
ராமநாதபுரம் நகராட்சியை கைப்பற்ற மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலான திமுக கடந்த ஆறு மாதங்களாகவே வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு ஆர்.கே.கார்மேகத்தின் பெயர் பேசப்படுகிறது. இவர் ராமநாதபுரம் வடக்கு நகர செயலாளராக இருக்கிறார்.ராமநாதபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சியினர் போடும் கணக்குகளுக்கு எல்லாம் தங்களது வாக்கு மூலம் விடையளிக்க ராமநாதபுரம் நகராட்சி பொது மக்கள் தயாராகி வருகின்றனர்.