மீண்டும் தள்ளிப்போனது புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல்.. கரூரில் கம்யூனிஸ்டுகளை கடுப்பேற்றும் திமுக..
திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவை தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி நகராட்சித் தலைவர், மாநகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர் மறைமுக தேர்தல் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 3 நகராட்சி, 8 பேரூராட்சி தலைவர் மறைமுகத் தேர்தலில் அதிக இடங்களில் திமுக தலைவர்களை வெற்றிபெற்றனர். திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டு இருந்தது.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது இதில் திமுக 12 வார்டுகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 வார்டு, சுயேட்சை 1 வார்டு, பிஜேபி 1 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்ற நிலையில், அன்று மாலையே திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத்தலைவர் பதவிகளில் திமுக நிர்வாகிகள் யாரும் போட்டியிடக் கூடாது. அப்படி போட்டியிட்டிருந்தால் தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்குமாறு கூறி சுற்றறிக்கை அனுப்பினார். அதை தொடர்ந்து கரூர் புலியூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் உஷாராணி கடந்த 08 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி காலை 09.30 மணி அளவில் புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்தது. இந்நிலையில் காலை 9 மணிக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 1-வது வார்டு உறுப்பினர்களின் வருகை புரிந்தார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புலியூர் பேரூராட்சி துணைத்தலைவர் வருகை புரிந்தார். பாஜக சார்பாக வேட்பாளர் வருகை புரிந்தார். இவர்கள் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் யாரும் மறைமுகத் தேர்தலில் பங்கேற்கவில்லை.
எனவே, அதிக பெரும்பான்மையான உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் நடைபெற இருந்த புலியூர் பேரூராட்சி மறைமுக தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 1-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கலாராணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் நான் தலைவர் ஆவதை சிலர் திட்டமிட்டு தடுப்பதாகவும், துணைத்தலைவர் தூண்டுதல் பேரிலேயே உறுப்பினர்கள் யாரும் இன்று வரவில்லை என செய்தியாளரிடம் தெரிவித்தார்
பெரும்பான்மையான உறுப்பினர்கள் வராததால் நடைபெற இருந்த மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து விட்டு சென்றனர். மதியம் ஒரு மணி அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் கலாராணி அலைபேசி மூலம் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் பேரூராட்சி அலுவலகம் வந்தார் . இந்நிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என்றும், தலைவர் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்றும் நம்பிவந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேர்தல் ஆணையம் தெரிவித்த பிறகு புலியூர் பேரூராட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியதால் காத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் மிகுந்த சோகத்துடன் அங்கிருந்து கிளம்பினார்.