Abp-Cvoter Exit Poll Result 2021: கொங்குவில் எங்கு அதிமுக? - எடுபடவில்லையா இபிஎஸ் பிம்பம்!
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என கூறப்பட்ட நிலையில் தற்போது ABP நாடு மற்றும் சிவோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கொங்கு மண்டலத்தில் அதிமுக எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாது என முடிவுகள் வந்துள்ளது. ஏன் இந்த நிலை என்பதை அலசி ஆராய்கிறது இந்த தொகுப்பு...
அளவில் அதிமுக அணிக்கு 70 தொகுதிகள் இழப்பு ஏற்படக்கூடும் என்றால், திமுக அணிக்கோ ஏறத்தாழ அதே அளவுக்கு 68 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கலாம் என்கிறது நம்முடைய வாக்குக்கணிப்பு முடிவு.
ஆளும் கட்சிக் கூட்டணியைப் பொறுத்தவரை, மேற்கு தமிழ்நாட்டில் பலத்த பின்னடைவுக்கு வாய்ப்பு. 42 தொகுதிகளை இப்போது கைவசம் வைத்திருக்கும் இந்த அணி, அதில் 24 இடங்களை இழக்க நேரிடும். அவை அனைத்தையும் அப்படியே எடுத்துக்கொள்கிறது, திமுக.
கொங்கு பகுதி என்றாலே அதிமுகவின் கோட்டை எனக் கூறப்பட்டுவந்தது, கடந்த மக்களவைத் தேர்தலிலேயே பொய்த்துப்போயிற்று. திமுக அதிகமான இடங்களை அந்தப் பகுதியில் கைப்பற்றியது. அது மட்டுமின்றி கொங்குவில் கணிசமான வாக்கு சதவீதத்தையும் அது பெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் தொழில் கொள்கைகள், புதிய முடிவுகளால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தொழில் கேந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, அந்நியச் செலாவணியை அதிக அளவில் ஈட்டுத்தரும் திருப்பூர் பின்னலாடை பகுதி பலவிதமான தொழில் நெருக்கடிக்கு ஆளானது. புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் கொங்கு வட்டாரத்தின் தொழில், வர்த்தக துறையினருக்கு கடுமையான பாதகங்களை உண்டாக்கியது. ஆனால் அது மக்களவைத் தேர்தலில் மட்டும்தான் எதிரொலித்தது; எடப்பாடி பழனிசாமி கொங்கின் மைந்தர்; நீண்ட காலத்துக்குப் பிறகு அமைச்சரவையில் தலைமகனாக இருக்கும் பழனிசாமிக்கு தங்கமென வாக்குகள் கிடைக்கும் என்பது அதிமுகவினரின் பலமான நம்பிக்கையாக இருந்தது.
குறிப்பாக, முதலமைச்சர் சார்ந்திருக்கும் சாதியினரின் வாக்குகள் கிடைக்கும் என்பது அதிமுக தரப்பின் கணக்கு.
ஆனால், 52 தொகுதிகளைக் கொண்ட கொங்கு வட்டாரத்தில், அதிமுக அணிக்கு 17 முதல் 19 இடங்களே கிடைக்கக்கூடும். கடந்த முறை 42 இடங்களில் வென்ற அந்த அணிக்கு 24 தொகுதிகளை இழப்பு ஏற்படும். இதே சமயம், அதே எண்ணிக்கையிலான இடங்களை எதிரணியான திமுக கைப்பற்றக்கூடும். தற்போது திமுக அணியிடம் 10 இடங்களே இருக்கின்றன.
இத்தனைக்கும் இரண்டு தரப்புமே பழைய முகங்களையும் புது முகங்களையும் கலந்துகட்டித்தான் நிறுத்தினார்கள்.
தொழில்துறை கேந்திரமாக இருக்கின்ற அளவுக்கு, கொங்குவின் இன்னொரு ஆதாரசுருதி, விவசாயம். பச்சைத்துண்டு மனிதர்கள் பரவிக்கிடக்கும் இந்த பூமியில், எடப்பாடி பழனிசாமியின் ‘விவசாயி’ எனும் சுயபட்டம் சுத்தமாக வேலைசெய்யவில்லை. உயர் கோபுர மின்கம்பிகளுக்காக விவசாய நிலத்தைக் கையகப்படுத்துவது, பெட்ரோலியக் குழாய்களுக்காக நிலமெடுப்பு போன்றவற்றோடு, புதிய வேளாண் சட்டங்களையும் முதலமைச்சர் ஆதரிக்க, அதை விவசாயிகள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.
விவசாயம் கைவிட்டுப் போனவர்கள் பனியன், போர்வை, லுங்கி, துண்டு என நெசவுப்பக்கம் வாழ்வாதாரத்தை மாற்றி வழிதேடினால், அதற்கும் அடி விழுந்தால் என்ன செய்வார்கள்? விவசாயம் செய்யாத ஒரு தலைமுறை உருவாகிவிட்ட கொங்கு மண்ணில் பட்டறைகளும் ஆலைகளும் அடிக்கடி மூடிக்கிடந்தால் உணவுக்கு என்ன வழி? இவையெல்லாம் வாக்களிப்புக்குப் பின்னால் வரிசை கட்டி நின்றிருக்கக்கூடும்.
முதலமைச்சரின் தலைமை பிம்பமும் அவருடைய பேச்சும்தான் எடுபடவில்லை என்று வைத்துக்கொண்டாலும், கொங்குவைக் கலக்கியெடுத்து, கொங்கு வட்டாரத்தின் முதலமைச்சராகவே வலம்வந்தாரே அமைச்சர் வேலுமணி.. அவருடைய செல்வாக்கு என்ன ஆனது? சாதி அடிப்படையில் அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என கணக்குகள் கூறப்பட்டனவே? அதெல்லாம்?
கொங்கு மண்டலத்தில் அதிமுக எங்கு எனக் கேட்கும்படியாக மக்கள் வாக்களித்திருப்பதாகத்தான் தெரிகிறது. எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் சாதி வேலை செய்துவிடும் என்பதற்கில்லையே!
பொள்ளாச்சி விவகாரம் இந்தியாவையே உச்சு கொட்ட வைத்தது, உள்ளூர் மக்களை மட்டும் ஒன்றும் செய்யாமல் இருக்குமா? கொங்கு வட்டாரத்து வாக்குச் சேர்மானத்தில் அந்த விவகாரமும் தீர்மானகரமான பங்காற்றியிருக்கும் என்பதை இந்த முடிவுகள் மூலம் அறிய முடிகிறது.