DMK vs VCK: ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன்? அவசரகதியில் வேட்பாளர் தேர்வு- ஓபனாக போட்டுடைத்த திருமா
Thirumavalavan: பல்லாவரம் கிடைத்திருந்தால் நிச்சயம் ஷா நவாஸ் போட்டியிட்டு இருப்பார். ’’ஷா நவாஸைத் தவிர்க்க வேண்டும். அவர் கூடாது’’ என்று எடுக்கப்பட்ட முடிவல்ல.- திருமாவளவன்.

விசிகவில் ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவசர கதியில் வேட்பாளர் தேர்வு நடந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட சீட் ஏன் இல்லை?
நாகை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஆளூர் ஷாநவாஸ். இவர் விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். இவருக்கு விசிகவில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து திருமா விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று இரவு 9 மணியிலிருந்து 1.30 வரை சூம் இணைய வழியே நடைபெற்றது.
தேமுதிகவுக்குச் சென்ற பல்லாவரம் தொகுதி
இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், ’’ஷாநவாஸ் நாகை தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று முதலில் கூறினார்கள். பிறகு ராயபுரம் தொகுதியை விரும்புகிறார் என்று தகவல் கிடைத்தது. அதனால் ராயபுரம் தொகுதியை டிக் அடித்து வைத்திருந்தேன். பின்பு பல்லாவரம் தொகுதியில் ஷாநவாஸ் போட்டியிட விரும்புகிறார் என்று கூறினார்கள்.ஆனால் அது தேமுதிகவுக்குச் சென்றுவிட்டது.
ஒருவேளை எங்களுக்குப் பல்லாவரம் கிடைத்திருந்தால், ஷாநவாஸுக்குப் போயிருக்கும். எனினும் திமுக வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய அவசரத்தில் இருந்தது. முதல்வரே தலையிட்டு தொகுதிகள் தேர்வை, விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.
அரூருக்கு பதில் அரக்கோணம், பல்லாவரத்துக்கு பதில் பண்ருட்டி
அப்போது கேட்ட தொகுதிகளைக் கொடுக்குமாறும் கூறி இருந்தார். கிடைக்கவே கிடைக்காது என்று கூறியிருந்த கள்ளக்குறிச்சியைக் கொடுத்தார்கள். அரூர் வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்ட நிலையில் அரக்கோணத்தைத் தந்தார்கள். பல்லாவரத்தைக் கேட்டபோது பண்ருட்டியைத் தந்தார்கள், கடைசி நிமிடத்தில் அவசரகதியில் இவ்வாறு தொகுதிகள் முடிவாகின.
பல்லாவரம் கிடைத்திருந்தால் நிச்சயம் ஷா நவாஸ் போட்டியிட்டு இருப்பார். ’’ஷா நவாஸைத் தவிர்க்க வேண்டும். அவர் கூடாது’’ என்று எடுக்கப்பட்ட முடிவல்ல. அப்துல் ரகுமானுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை’’.
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இருப்பதால் பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று, விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 6 தனித்தொகுதிகளும், 2 பொதுத்தொகுதியும் உள்ளன. அதன்படி காட்டுமன்னார் கோயில், செய்யூர், பெரியகுளம், திண்டிவனம், அரக்கோணம், பண்ருட்டி, கள்ளகுறிச்சி, திருப்போரூர் ஆகிய இடங்களில் விசிக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.





















