Chennai Mayor Priya Interview: முதலமைச்சரின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவேன் : சென்னை மேயர் வேட்பாளர் பிரியா ராஜா பேட்டி
முதலமைச்சரின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று சென்னை மேயர் திமுக வேட்பாளர் பிரியா ராஜா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று சென்னை மேயர் திமுக வேட்பாளர் பிரியா ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க. நகரின் 74 ஆவது வார்டைச் சேர்ந்த இளம்பெண் பிரியா ராஜா சென்னை மேயராகிறார். இவர் 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர். தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3ஆவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர்.
சென்னை மேயர் வாய்ப்பு குறித்துப் பேசிய பிரியா ராஜன், ''இதைப் பதவியாகக் கருதவில்லை. பொறுப்பாகத்தான் கருதுகிறேன். தலித் பெண்ணான எனக்கு இந்த வாய்ப்பை அளித்த திமுக தலைவருக்கு என்னுடைய நன்றி. என்னுடைய கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றுவேன். கடந்த 8 மாதங்களில் முதலமைச்சர் சென்னைக்குத் தேவையான பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
சாலை, சுகாதார வசதிக்கு முக்கியம்
நிறைய இடங்களில் சாலை பிரச்சினைகள் உள்ளன. அதைச் சரிசெய்வேன். கொரோனா காலகட்டத்தில் மாநகரின் சுகாதாரம் முக்கியம். அதைக் காப்பேன். குப்பை மேலாண்மையைத் திறம்பட நிர்வகிப்பேன். எல்லா வார்டுகளிலும் உள்ள பிரச்சினைகளை அந்தந்த கவுன்சிலர்கள் சரிசெய்தாலே போதும். மக்களுக்கு சேவை செய்யத்தான் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
வட சென்னை பகுதியில் அனைத்து இடங்களிலும் குடிநீர் வசதி, சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. மழைக் காலங்களில் மக்கள் நிறைய அவதிகளைச் சந்திக்கின்றனர். அதைச் சரிசெய்வேன். முதலமைச்சரின் ஆலோசனைகளின் அடிப்படையில், என்னுடைய பணியைத் தொடர்வேன். மேம்பாலம் உள்ளிட்ட பல திட்டங்கள் அவரிடம் உள்ளன. முதலமைச்சரின் திட்டங்களை நிறைவேற்றுவேன்'' என்று பிரியா ராஜன் தெரிவித்தார்.
சென்னை மேயர் வேட்பாளரிடம் மொத்தமாக 8 லட்சத்து 24 ஆயிரத்து 941 ரூபாய் (ரூ.8,24,941) சொத்து உள்ளது.
கணவர் ராஜாவிடம் ரூ.3,80,179 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்துகள் எதுவும் அவரிடம் இல்லை. சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் விலை மதிப்பு ரூ.67,500 ஆக உள்ளது. சுய சம்பாத்திய சொத்து மொத்த மதிப்பு ரூ.1,25,000 ஆக உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.5,05,179 ஆக உள்ளது.
வட சென்னையில் இருந்து மேயர்
சென்னை மேயர் பதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வகித்த பதவி. இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
வட சென்னை பகுதி பெரு வெள்ளம் ஏற்படும்போது கடுமையாக பாதிக்கப்படுகிறது. குப்பைகள் அதிகமாகத் தேங்கும் பகுதியாக உள்ளது. எனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குப் பொறுப்பு வழங்கப்படும்போது பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை மேம்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் வட சென்னையைச் சேந்தவருக்கு இப்பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வட சென்னையைச் சேர்ந்தவர் மேயராக அறிவிக்கப்பட உள்ள நிலையில், துணை மேயராகத் தென் சென்னை பகுதியைத் சேர்ந்த மகேஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.