"விஜய் படம் ஒட்டாத வீட்டில் ஓட்டு விழாது" - தவெக வேட்பாளர் சத்யபாமா சர்ச்சை பேச்சு
அனைவரும் தவெகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அப்படி வாக்களிக்காதவர்கள், மாற்றுக் கட்சியினரை நாம் மாற்றும் வேலையில் ஈடுபட வேண்டும் - தவெக வேட்பாளர் சத்யபாமா

“ஒவ்வொரு வீடாக முதலமைச்சரின் விஜயின் புகைப்படத்தை ஒட்டுங்கள், எந்த வீட்டில் ஒட்ட வேண்டாம் என சொல்கிறார்களோ, அந்த வீட்டில் தவெகவிற்கு ஓட்டு விழுகாது “ என்று தவெக வேட்பாளர் சத்யபாமா தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல், பிரச்சாரம் என மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக தேர்தல் பணிமனையில் வேட்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வேட்பாளர் சத்தியபாமா, “அதிமுகவில் நல்ல தலைவர் இல்லாத காரணத்தால் தவெகவிற்கு வந்தேன். என்னை கட்சி மாறியவர் என்று மட்டுமே கூற முடியும். தற்பொழுது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பானுமதி தேர்தல் தேதிக்கு முன்பு வரை தவெகாவில்தான் இருந்தார். அதிமுகவில் எம்எல்ஏ சீட்டுக் கொடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரிலேயே அவர் அதிமுகவிற்கு சென்றார்.
ஒருவருக்கு 50 ஓட்டுகள் என பிரித்து வேலை செய்ய வேண்டும். அனைவரும் தவெகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அப்படி வாக்களிக்காதவர்கள், மாற்றுக் கட்சியினரை நாம் மாற்றும் வேலையில் ஈடுபட வேண்டும்.
ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
எம்ஜிஆர் நல்ல தலைவர்
அதிமுகவில் நல்ல தலைவர்கள் இல்லை என கூற மாட்டேன். எம்ஜிஆர் ஒரு நல்ல தலைவர் தான். 40 ஆண்டு கால ஆட்சியில் திமுக, அதிமுக இடையே சட்டமன்றத்தில் இத்தனை கேள்விகள் எழுந்ததில்லை, தற்போது எடப்பாடி பழனிசாமி நாற்காலியின் அடியில் முள்படுக்கைப்போல் ஒவ்வொரு கேள்விகளாக தொடர்ந்து அடுக்கி வருகிறார்.
திமுக ஆட்சியில் இருக்கும் போது எதிர் கட்சியாக இருந்த எடப்பாடி பழனிசாமி இத்தனை கேள்விகளை கேட்கவில்லை. அப்போதே எனக்கு சந்தேகம் இருந்தது. திமுக என்ன அத்தனை சுத்தமான ஆட்சி நடத்தியதா?
தாராபுரம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இணைந்து தவெகாவை வீழ்த்த முயற்சிக்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது. அதிமுக - திமுக இணைப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்ததை அடுத்து நான் கட்சியிலிருந்து விலகினேன்.
தற்பொழுது ஊழலற்ற ஆட்சியில் உள்ளேன். ஒரு நல்ல தலைவரின் கீழ் பணியாற்ற வந்துள்ளேன். சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் திமுக - அதிமுக இருவரும் இணைந்து செயல்படுகின்றன இது வரலாறு காணாத ஒன்று” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















