Bihar Election Result: துரோகம்.. ஏமாற்றம்.. 20 ஆண்டுகால ஆட்சி.. பீகாரை ஆளும் நிதிஷ்குமார்.. சி.எம்., சீட் நீடிக்குமா?
Bihar Election 2025 Result: பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக நீடிக்க, நிதிஷ்குமார் (Nitish Kumar) முன்னெடுத்த அரசியல் சதுரங்க முடிவுகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Bihar Election 2025 Result: பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக நிதிஷ்குமார் நீடிப்பது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ்குமாருக்கு மீண்டும் அரியணை?
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை, நிதிஷ்குமார் மற்றும் பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக பீகார் முதலமைச்சராக உள்ள நிதிஷ்குமார், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அந்த பதவியில் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், கடந்த இரண்டு தசாப்தங்களாக முதலமைச்சர் இருக்கையை நிதிஷ்குமார் தக்கவைத்தது எப்படி? அதற்கு அவர் முன்னெடுத்த அரசியல் சதுரங்க நடவடிக்கைகள் என்ன? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
நிதிஷ்குமாரின் வளர்ச்சி:
பீகாரின் அரசியல் முகங்களாக கருதப்படும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே, மாநிலத்தின் முன்னோடியாக கருதப்படும் கர்பூரி தாக்கூரிடம் அரசியல் பயின்றவர்கள் ஆவர். நாலந்தா மாவட்டத்தில் உள்ள கல்யான் பிகா கிராமத்தில் 1951ம் ஆண்டு பிறந்த நிதிஷ்குமார், தந்தையின் சுதந்திர போராட்ட பங்களிப்பை கண்டு அரசியலில் ஈர்ப்பை பெற்றார். காங்கிரசுக்கு எதிரான மனநிலை கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கி, ஜனதா கட்சி சார்பில் 1977ம் ஆண்டு முதல்முறையாக தேர்தல் அரசியலில் களம் கண்டார். முதல் இரண்டு தேர்தல்களிலும் ஹர்நாட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட நிதிஷ், 1985ம் ஆண்டு தேர்தலில் லோக் தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1989ம் ஆண்டு பார் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானதோடு, வி.பி. சிங்கின் ஆட்சியில் மத்திய அமைச்சரகாவும் பொறுப்பேற்றார்.
முதலமைச்சர் பதவிக்கான பயணம்:
லாலு பிரசாத் யாதவ் உடன் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி, நிதிஷ்குமார் சமதா கட்சியை தொடங்கினார். நாளடைவில் அது ஐக்கிய ஜனதா தளமாக உருவெடுத்தது. 1990 தொடங்கி தொடர்ந்து 7 ஆண்டுகள் லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தான் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ்குமார் மாநிலத்தில் இரண்டு முக்கிய அரசியல் முகங்களாக உருவெடுக்க தொடங்கினார். லாலுவிற்கு பிறகு அவரது மனைவியும் முதலமைச்சரானார். அவரது ஆட்சி கவிழ்ந்தது, 2000ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சரானார். ஆனால், போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால், ஒரே வாரத்தில் அவரது ஆட்சி பறிபோனது. ஆனாலும், 2004ம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும், வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய அமைச்சர் பதவி வகித்தார்.
அரியணையில் நிதிஷ்குமார்:
பீகார் மாநிலத்தில் இருந்து 2000ம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலம் பிரிந்த பிறகு, 2005ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் லாலு பிரசாத் கட்சி 75 தொகுதிகளையும், நிதிஷ்குமாரின் கட்சி 55 இடங்களையும் மற்றும் பாஜக 37 தொகுதிகளையும் கைப்பற்றியது. எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுதலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. தொடர்ந்து அதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக முறையே 88 மற்றும் 55 தொகுதிகளை கைப்பற்றின. லாலு பிரசாத் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதல்முறையாக பீகார் மாநில முதலமைச்சரானார்.
பீகாரை ஆளும் நிதிஷ்
2005 நவம்பருக்குப் பிறகு நிதிஷின் மிகப்பெரிய அரசியல் சாதனை, பாஜக மற்றும் ஆர்ஜேடியுடன் கூட மாறி மாறி கூட்டணி அமைத்து முதலமைச்சர் நாற்காலியை அவர் உறுதியாக தன்வசப்படுத்தினார். பீகாரின் அதிகார அமைப்பில் அவர் முற்றிலும் இன்றியமையாதவராக மாறிவிட்டார். நிதிஷ்குமார் இன்றி பீகார் மாநில அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கினார். தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அங்கீகாரத்தை அவர் எட்டாவிட்டாலும், யார் ஆட்சி நிலவ வேண்டும் என்பதை உறுதி செய்யும் சக்தியை கொண்டவராக திகழ்கிறார்.
துரோகங்களும்.. ஏமாற்றங்களும்..
2010 தேர்தலில் நிதிஷ் குமார் கட்சி 115 இடங்களை கைப்பற்ற, பாஜக 81 இடங்களையும், ஆர்ஜேடி 22 இடங்களையும் வென்றது. ஜூன் 2013 இல், அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவின் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மோடியை சவால் செய்ய நிதீஷ் முயன்றார், இதனால் ஜூன் 16, 2013 அன்று பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தார். இருப்பினும், மக்களவைத் தேர்தலில் அவரது கட்சியால் மாநிலத்தில் இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்த நிதிஷ், ஜிதன் ராம் மஞ்சியை வாரிசாக நியமித்து, லாலுவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து மகா கூட்டணி அமைத்தார்.
கூட்டணியை மாற்றி விளையாடிய நிதிஷ்
நிதிஷ்குமார் - லாலு பிரசாத் கூட்டணி மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் பரப்புரைடை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக ஆர்ஜேடிக்கு 80 இடங்களும், ஜேடியுவுக்கு 71 இடங்களும் கிடைத்தன, இதனால் பாஜக 53 இடங்களுக்குத் தள்ளப்பட்டது. பிப்ரவரி 22, 2015 அன்று நிதிஷ் மீண்டும் முதலமைச்சரானார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார்.
- தேஜஸ்வி யாதவ் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2017ம் ஆண்டு ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக உடன் இணைந்து ஆட்சி அமைத்தார்
- தொடர்ந்து, 2022ம் ஆண்டில் தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க முயல்வதாக குற்றம்சாட்டி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார், ஆர்ஜேடி உடன் சேர்ந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைத்தார்
- பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். 2024 பொதுத்தேர்தலுக்கு முன்பாக அவர் எடுத்த இந்த முன்னெடுப்பு தேசிய அளவில் பெரும் கவனம் ஈர்த்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்தார். இது எதிர்க்கட்சிகளின் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.





















