PM ModI TN Visit: பிரதமர் மோடி கோவையில் இன்று ரோட் ஷோ.. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் குவிப்பு..
PM ModI TN Visit: பிரதமர் மோடி இன்று கோவையில் ரோட் ஷோ எனப்படும் வாகன பேரணியில் ஈடுபட உள்ளார்.
PM ModI TN Visit: பிரதமர் மோடியின் ரோட் ஷோவ ஒட்டி, கோவையில் இன்று 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் ரோட் ஷோ:
நாடாளுமன்ற மக்களவ தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழுவேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே 5முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அப்போது, ரோட் ஷோ எனப்படும் வாகன பேரணியில் பிரதமர் மோடிஈடுபட உள்ளார். தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், பிரதமர் மோடி ரோட் ஷோ செல்வது வழக்கம். அந்த வகையில் கோவை ரோட் ஷோவின் போது, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார்:
ஆர்.எஸ். புரத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் மோடி, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகிலிருந்து, ஆர்.எஸ். புரம் தலைமை தபால் நிலையம் அருகே வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோவில் ஈடுபட உள்ளார். இறுதியாக, 1998ல் கோவை குண்ட்யுவெடிப்பில் பலியான 56 பேருக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக கோவையில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி நடைபெற உள்ள பகுதி முழுவதும் தேசிய பாதுகாப்பு படையில் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
பிரதமர் மோடியின் வாகன பேரணி நடைபெற உள்ள பகுதிகளில், சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனைச்சாவடிகள் அனைத்திலும் வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றம் தந்த அனுமதி:
பிரதமர் மோடியின் ரோட் ஷோவிற்கு கோவை மாநகர காவல்துறை, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் பிரதமருக்கு உள்ள அச்சுறுத்தல்களை காரணம் காட்டி முதலில் அனுமதி மறுத்தது. இதையடுத்து, பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் ரோட் ஷோவிற்கு அனுமதி அளித்தார். அதேநேரம், யாரும் பதாகைகள் போன்றவற்றை வைக்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்தார்.