ADMK Manifesto Highlights: மாதந்தோறும் மகளிருக்கு ரூ.3000, நீட் தேர்வுக்கு மாற்று, விவசாயிகளுக்கு ரூ.5000: அதிமுக டாப் 10 தேர்தல் வாக்குறுதிகள்!
ADMK Lok Sabha Election Manifesto Highlights: நீட்டுக்கு மாற்றாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் / மாணவியர் சேர்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.
மாதந்தோறும் ஏழை மகளிருக்கு ரூ.3000 வழங்கப்படும், நீட் தேர்வுக்கு மாற்று முறை அறிமுகம் செய்யப்படும், விவசாயிகளுக்கு ரூ.5000 மாத ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது.
சென்னை, ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 133 அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
இதில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?
* ஆளுநர் பதவி நியமன முறையில் கருத்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
* மருத்துவப் படிப்புக்கான நீட்டுக்கு மாற்றுத் தேர்வு முறை
மாநில அரசுகள் பல்வேறு பாடத் திட்டங்களை பின்பற்றி வருவதால் மருத்துவப் படிப்புக்கு மத்திய அரசால் நடத்தப்படும் நீட் பாரபட்சமாக இருப்பதாலும், தமிழக வரலாற்று நிகழ்வுகளைவிட வடமாநில வரலாற்று
நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்றிருப்பதாலும், இந்தித் திணிப்பை உள்ளடக்கி இருப்பதாலும், அதற்கு எதிர்ப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில், அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் நீட்டுக்கு மாற்றாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் / மாணவியர் சேர்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வலியுறுத்தும்.
* மாதந்தோறும் ஏழை மகளிருக்கு ரூ.3000 வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்ப்படும்.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். ஊதியம் ரூ.450 ஆக அதிகரிக்கப்படும்.
* உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
* பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயத்தை மேற்கொண்டு, விலைகள் குறைக்கப்பட வேண்டுமென்று அதிமுக வலியுறுத்தும். சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தப்படும்.
* மத்திய, மாநில அரசுகள், பெருகி வரும் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.
* இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
* நெகிழி பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசின் உதவியோடு மேற்கொள்ள வலியுறுத்தப்படும்.
* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு கல்விக் கடனை முழுமையாக ஏற்று தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.