ABP CVoter Opinion Polls: கைமாறுகிறதா அதிகாரம்..? ஆட்சிக்குத் தயாராகும் கட்சிகள்; 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் இதோ
5 மாநிலத் தேர்தல்களின் தாக்கம் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய I.N.D.I.A கூட்டணியும் தீவிரமாக ஆயத்தம் ஆகி வருகின்றன.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் என்பது எப்போதும் மிகவும் முக்கியமானதாக கருதப்படும். அதாவது மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் என்பதால் இதன் தாக்கம் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசும், ஆட்சியைப் பிடிக்க வியூகங்கள் மேல் வியூகங்கள் வகுத்து வரும் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய I.N.D.I.A கூட்டணியும் தீவிரமாக இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தம் ஆகி வருகின்றன.
இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 45 முதல் 51 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, 39 முதல் 45 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், 2 இடங்களில் வெற்றிபெறுவார்கள் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு நடைபெற்ற கருத்துக் கணிப்பில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 48 முதல் 60 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் வெற்றிபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிஆர்எஸ், 43 முதல் 55 தொகுதிகளிலும் பாஜக, 5 முதல் 11 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மத்தியப் பிரதேசத்தில், நவம்பர் மாதம் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 113 முதல் 125 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆளுங்கட்சியான பாஜக, 104 முதல் 116 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 127 முதல் 137 தொகுதிகள் வரையில் பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பது தெரியவருகிறது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், 59 முதல் 69 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் மிகவும் சிறிய மாநிலம் என்றால் அது மீசோரம். இந்த மீசோரத்திற்கு நவம்பர் மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அந்த மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள மீசோ தேசிய முன்னணி கட்சி 13 முதல் 17 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 10 முதல் 14 இடங்களும், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி 9 முதல் 13 தொகுதிகள் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.