+2 தேர்வை ஒத்திவைத்து நடத்த தமிழக அரசு திட்டமா? அமைச்சர் விளக்கம்
நுழைத்தேர்வு என்பது அரசின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாலும் தேர்வு நடத்த வேண்டிய நிலை உள்ளது.
மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தேர்வுகளை எப்படி நடத்துவது எப்படி என்று கருத்துகளை தெரிவிக்க கூறினார்களே தவிர தேர்வுகளை ரத்து செய்யலாமா என எந்த கருத்தும் கேட்கவில்லை என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். இன்று திருச்சியில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அன்பில் மகேஷ், தமிழகத்தில் +2 தேர்வுகளை நடத்துவது பற்றி நாளை தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பார் எனவும் கூறினார்.
நாளை முடிவு:
சி.பி.எஸ்.இ சார்பில் +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் தேர்வுகள் ரத்தாகுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “தேர்வுகளை நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி, அனைத்து கருதுகளும் முதல்வரிடம் கொடுக்கப்படும். கருத்துகள் அடிப்படையில் உரிய முடிவை முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார்” என்றார்.
மத்திய அரசு சொன்னது என்ன?
தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் இருந்து கடிதம் வந்ததாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வுகளை எப்படி நடத்தலாம் என கருத்து கூறுமாறு மட்டுமே அந்த கடித்தத்தில் கூறப்பட்டிருந்ததாகவும் தேர்வகளை ரத்து செய்யலாமா என கேட்கவில்லை என்றார், அதோடு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்தில் கூட பலரும் தேர்வினை ரத்து செய்ய வேண்டாமென கூறியதாகவும் ஆனால் பிரதமர் இப்போது ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றார்.
மேலும் “பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டதோ அதே போன்று ரத்து செய்யப்பட்டுள்ள 12ம் வகுப்புக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என கூறியுள்ளார்கள், ஆனால் எதன் அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கீடு செய்வார்கள் என்று தெரியவில்லை எனவும் கூறினார்.
என்ன முடிவுக்கு வாய்ப்பு?
ஆரம்பம் முதலே தமிழ்நாடு அரசு தேர்வினை நடத்துவது என்பதையே தனது நிலைப்பாடாக கொண்டுள்ளது. ஏனெனில் நுழைத்தேர்வு என்பது அரசின் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாலும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாலும் தேர்வு நடத்த வேண்டிய நிலை உள்ளது.
இது பற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “மாணவர்களுக்கு தேர்வு எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களது உடல்நிலையும் முக்கியம்” என கூறினார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சில முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக,
- தேர்வினை ஒத்தி வைப்பது – கல்லூரி சேர்க்கை சிக்கலாகலாம்
- குறிப்பிட்ட பாடங்களுக்கு தேர்வு
- ஆன்லைன் வழித்தேர்வு – சாத்தியம் குறைவு
- தேர்வு ரத்து – மதிப்பெண் முறை கணக்கீடு சிக்கலாகும்
தமிழ்நாட்டில் +2 தேர்வு நடக்குமா இல்லையா என்பது பற்றி நாளை முடிவு தெரிந்து விடும். அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, குஜராத், உ.பி. ஆகியவை தேர்வை ரத்து செய்துள்ளன.