Vijayadashami Admission 2025: விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!
Vijayadashami 2025 School Admission: விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கைப் பணிகளை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விஜயதசமி (02.10.2025) அன்று மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜூன் மாதம் வழக்கமாக மாணவர் சேர்க்கை பணிகள் நடந்து முடியும் நிலையில், விஜயதசமி நாளிலும் (02.10.2025) மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநர் இதுதொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
அக்டோபர் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2025-26 ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டியில் தெரிவித்துள்ளபடி 26.09.2025 அன்றுடன் காலாண்டு தேர்வுகள் முடிந்தன.
அன்றே இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு 27.09.2025 அன்று முதல் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 06.10.2025 திங்கள் அன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
மேலும் விஜயதசமி ( 02.10.2025 ) அன்று மாணவர் சேர்க்கைப் பணிகளை அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் தகவலை தெரிவித்து, வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் எடுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாள் அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.






















