அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
ப்ரீஸ்கூல் எனப்படும் மழலையர் கல்விக்கான செலவு மட்டுமே அமெரிக்கக் குடும்பங்களுக்கு மிகப்பெரிய ஆரம்பக் கல்விச் செலவாக அமைகிறது என்பதையும் அவர் தனது வீடியோவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநிலத்தின் சிம்ஸ்பரி நகரில் சோனல் சவுத்ரி என்னும் இந்தியர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், அமெரிக்க மழலையர் பள்ளி கல்விக்கான செலவுத் தொகை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது இரண்டு வயது மகள் பானியை பள்ளியில் சேர்ப்பதற்காக, அங்குள்ள ஒரு பிரபலமான தனியார் மழலையர் பள்ளிக்கு சோனல் நேரில் சென்றிருந்தார்.
அப்போது அங்குள்ள ஷெரில் என்ற பள்ளி ஊழியரைச் சந்தித்துப் பேசியபோது, பள்ளியின் திட்டங்கள், தினசரி செயல்பாடுகள் மற்றும் கற்றல் முறைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது. அங்கு சோனலை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு முக்கியமான விஷயம், ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சரியான விகிதமாகும். வெறும் 8 குழந்தைகள் மட்டுமே கொண்ட ஒரு சிறிய குழுவிற்கு, தலா 2 ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் திறன் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பாடல் பாடுதல், யோகா, கற்பனைத் திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் ஆரம்பகால கற்றல் பயிற்சிகள் போன்றவை அங்கு சிறப்பாகக் கற்றுத் தரப்படுகின்றன.
ஆண்டுக்கு 9 லட்சம் கட்டணம்
இதன்பின் பள்ளிக் கட்டணம் பற்றி விவாதிக்கப்பட்டபோது மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே செல்லும் கல்வித் திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவே வாரத்தில் ஐந்து நாட்கள் முழுமையாகச் செல்லும் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான தொகையானது, இந்தியாவில் ஒரு புதிய மாருதி பிரெஸ்ஸா காரை வாங்கும் விலைக்குச் சமமாகும்.
இப்பள்ளியின் கல்வி ஆண்டு செப்டம்பரில் தொடங்கி ஜூன் மாத இறுதியில் முடிவடைகிறது. தினசரி வகுப்புகள் காலை 8.45 மணி முதல் 11.45 மணி வரை மட்டுமே நடைபெறுகின்றன. கட்டணம் மிக அதிகமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பான வசதிகள், தனிப்பட்ட கவனம் மற்றும் சரியான கற்றல் சூழல் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தக் கட்டணம் ஓரளவுக்கு நியாயமாகவே தோன்றுகிறது என்று சோனல் கூறியுள்ளார். தனியார் பள்ளிகள் என்பதாலேயே இந்தக் கட்டணம் பெற்றோர்கள் எதிர்பார்ப்பதை விட கணிசமாக அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலவசக் கல்வி
அமெரிக்காவில் கே.ஜி. வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிக் கல்வி அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, ப்ரீஸ்கூல் எனப்படும் மழலையர் கல்விக்கான செலவு மட்டுமே அமெரிக்கக் குடும்பங்களுக்கு மிகப்பெரிய ஆரம்பக் கல்விச் செலவாக அமைகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியான அவரது இந்தப் பதிவு பார்வையாளர்களிடையே தற்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























