(Source: ECI/ABP News/ABP Majha)
Ananya UPSC Topper: 22 வயது, வீட்டிலேயே படிப்பு, கோலிதான் இன்ஸ்பிரேஷன்- யுபிஎஸ்சி தேர்வில் 3ஆம் இடம்பிடித்த அனன்யா!
22 வயது இளம் பெண்ணான அனன்யா ரெட்டி, பயிற்சி மையம் சென்று படிக்காமல் வீட்டிலேயே படித்து, யுபிஎஸ்சி தேர்வில் 3ஆம் இடம்பிடித்துள்ளார். கோலிதான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் டொனுரு அனன்யா ரெட்டி என்னும் 22 வயது தெலங்கானா இளம்பெண் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நேற்று (ஏப்ரல் 16) வெளியாகின. இதில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா (ADITYA SRIVASTAVA) என்னும் தேர்வர் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதான் என்பவர் பெற்ற நிலையி, மூன்றாம் இடத்தை டொனுரு அனன்யா ரெட்டி (DONURU ANANYA REDDY) என்னும் தெலங்கானா மாணவியும் பெற்றிருந்தார்.
யார் இந்த அனன்யா ரெட்டி?
தெலங்கானாவின் மஹபூர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டொனுரு சுரேஷ் ரெட்டி. சிறிய அளவில் தொழில் செய்துவருகிறார். இவரின் மகள் ரொனுரு அனன்யா ரெட்டி. மஹபூப் நகரில் பள்ளிப் படிப்பை முடித்த அனன்யா, உயர் கல்விக்காக ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஏ ஹானர்ஸ் படித்த அனன்யா, படிப்பை முடித்து ஓராண்டுக்குள்ளாகவே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானார். முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
தினந்தோறும் 12 முதல் 14 மணி நேரம் படிப்பு
மானுடவியல் படிப்புக்கு மட்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்த அனன்யா, மீதமுள்ள அனைத்துப் பாடங்களையும் வீட்டில் இருந்தே படித்திருக்கிறார். தினந்தோறும் 12 முதல் 14 மணி நேரம் படித்திருக்கிறார் அனன்யா.
யுபிஎஸ்சி வெற்றிக்குப் பிறகு பேசியவர், ‘’கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என்று நம்பினேன். தேர்வு, நேர்காணல்களுக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் இடம் பிடிப்பேன் என்று எண்ணினேன். ஆனால் அகில இந்திய அளவில் 3ஆவது இடத்தில் தேர்வாவேன் என்று நினைக்கவில்லை.
கிரிக்கெட் எனக்குப் பிடித்தமான ஒன்று. அதில், விராட் கோலிதான் என்னுடைய உத்வேக வீரர். அவரின் எதையும் எளிதில் விட்டுவிடாத மனோபாவம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. அவரின் பணியும் ஒழுக்கமும் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று’’ என அனன்யா ரெட்டி தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரிவினர் எவ்வளவு தேர்ச்சி?
யுபிஎஸ்சி இறுதித் தேர்வில் பொதுப் பிரிவினர் - 347,
பொருளாரத்தில் பின்தங்கிய பிரிவினர்- 115,
ஓபிசி - 303 ,
எஸ்சி - 165,
எஸ்டி - 86 என்ற வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ் பணிகளுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பொதுப் பிரிவு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 180 பேர் தேர்வாகி உள்ளனர். ஐஎஃப்எஸ் பணிக்கு மொத்தம் 37 பேர் தேர்வாகி உள்ளனர். ஐபிஎஸ் பணிகளுக்கு 200 பேர் தேர்வாகி உள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதேபோல குரூப் ஏ பிரிவுக்கு 613 பேரும், குரூப் பி பிரிவுக்கு 113 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 1,143 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.