UGC Regulations 2024: ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை; குறைந்தபட்ச வருகை போதும்; யுஜிசி அதிரடி!- விவரம்
ஆண்டுக்கு இரு முறை ஜூலை/ ஆகஸ்ட் மாதங்களில் மற்றும் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
பல்கலைக்கழக மானியக் குழு, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்குப் பின்பற்றுவதற்கான வழிகாட்டு வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
ஆண்டுக்கு 2 முறை சேர்க்கை (Biannual admission)
ஆண்டுக்கு இரு முறை ஜூலை/ ஆகஸ்ட் மாதங்களில் மற்றும் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், உயர் கல்வி சேர்க்கை இனி பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்முறை நுழைவு, வெளியேறல் வழங்குமுறை (Provision of multiple entry and exit)
உயர் கல்வி நிலையங்களில் பன்முறை நுழைவு, வெளியேறல் முறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான உருவாக்க மதிப்பீடு, முன் கற்றலின் அங்கீகாரம், இரண்டு UG/ PG திட்டங்களைப் பின்பற்றுதல் ஆகியவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான நெகிழ்வுத் தன்மை (Flexibility for students)
12ஆம் வகுப்பில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்தாலோ அல்லது இளங்கலைப் படிப்பு எதைப் படித்தாலோ, ஒரு மாணவர் எந்தப் படிப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அந்த மாணவர் தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழக அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது மட்டும் முக்கியம் ஆகும்.
குறைந்தபட்ச வருகைப் பதிவே போதும் (Minimum attendance requirement)
புதிய கல்விக் கொள்கையால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு கற்றல் முறைகள் மற்றும் முழுமையான மற்றும் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் வெவ்வேறு திட்டங்களில் மாணவர்களின் குறைந்தபட்ச வருகைத் தேவையை தீர்மானிக்கலாம் என்று யுஜிசி பரிந்துரைத்துள்ளது.