TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
கடந்தாண்டு 10, 12 ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பித்திருந்தார்.
விரைவில் நாம் சந்திப்போம் என 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ”தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என சொல்லிக்கொண்டிருக்கும் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை கவரும் வகையில் பல்வேறு செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவ, மாணவியர்களை விஜய் ஊக்கப்படுத்திய சம்பவம் ஒரு பக்கம் அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இப்படியான நிலையில் நடப்பாண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியானது. இன்றைய தினம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.
இந்த முறையும் 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவி மகாலெட்சுமிக்கு வைர நெக்லஸ் வழங்குவாரா? அல்லது வேறு எதுவும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். கடந்த முறை நடிகர் விஜய்யாக இருந்தவர், இந்த முறை தமிழக வெற்றி கழக தலைவராக மாணவ, மாணவியர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.