TNPSC Group 4: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு! வாக்குவாதம் முற்றி கேட்டினை உடைக்க முயன்ற தேர்வர்கள்!
குரூப் 4 தேர்வு எழுத 5 நிமிடம் தாமதமாக வந்தவர்களைத் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால், தனியார் தேர்வு மைய வளாகம் முன்பு தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத 5 நிமிடம் தாமதமாக வந்தவர்களைத் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால், தனியார் தேர்வு மைய வளாகம் முன்பு தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் வளாக கேட்டினை தள்ளி உடைக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கடந்த மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.
இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இன்று நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இம்மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.
இத்தேர்வுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்று சிறப்புப் பேருந்துகள் இயங்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 68,244 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் தேர்வினை எழுதி வருவதால் அதனைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் 53 நடமாடும் குழுக்களும் 27 பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வினை எழுதும் மையத்தில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் எடுத்து செல்ல கூடாதென அறிவுறுத்தி, சோதனையிட்ட பின்னரே தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். தேர்வு எழுத வந்த தேர்வர்களை காலை 8.59 மணி வரை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். தேர்வை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகளும், தேர்வு மையம் முன் பேருந்துகள் நின்று செல்லவும் அறிவுறுத்தப்பட்டன.
இந்நிலையில் விழுப்புரம் மாதாகோவில் அருகில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேர்வு எழுத வந்த 10 தேர்வர்கள் 9.05 க்கு தேர்வு மையத்திற்குள் வந்ததால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பெண் தேர்வர்கள் உட்பட்ட 10 பேர் தேர்வு மைய வாயிலில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வளவனூரைச் சேர்ந்த பிரியா என்ற பெண் தேர்வு மையத்தில் அனுமதிக்க கோரினார்.
திடீரென வாயில் கேட்டினை திறக்கக்கோரி, கேட்டினைத் தள்ளி உடைக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தேர்வு மைய வாயிலில் இருந்தவர்களை அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதே போன்று விழுப்புரத்திலுள்ள பல்வேறு மையங்களில் தேர்வு எழுதத் தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.