TN 10th Result 2023: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இவர்தான் முதல் மதிப்பெண்
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த மாணவிகளை பள்ளி முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்து பள்ளி முதல்வர் பாராட்டு தெரிவித்தார்
2022- 23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் சுமார் 9,14, 320 மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் நடைபெற்ற நிலையில், இப்பணியில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
மேலும், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நிறைவடைந்து முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அதன்பின்னர் தேர்வு முடிவு தேதி மே 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் திட்டமிட்டபடி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவ, மாணவிகள் தெரிந்துக் கொள்ளலாம். மேலும், தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கும் முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.64% தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,55, 017 மாணவிகள், 4,59,303 மாணவகள் என மொத்தம் 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,35,614 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,04,904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் 86.31 சதவீதம் தேர்ச்சி:
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 6063 மாணவர்கள், மாணவிகள் 5993 என 12,056 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 5023 மாணவர்கள், 5383 மாணவிகள் என மொத்தம் 10,405 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.83 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.82 ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 86.31% ஆகும். அரசு பள்ளிகளை பொறுத்தவரை 69 பள்ளிகளைச் சேர்ந்த 2168 மாணவர்கள், 2262 மாணவிகள் தேர்வு எழுதி நிலையில், மாணவர்கள் 1611 பேரும், மாணவிகள் 1857 பேரும் மொத்தம் 3468 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.28 ஆக உள்ளது. 2 அரசு பள்ளிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29 மெட்ரிக் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிக தேர்ச்சியை பெற்றுள்ளது.
மாவட்ட வாரியாக விவரம்
இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் (97.67% ), சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 4வது இடத்தில் கன்னியாகுமரி (95.99%), 5வது இடத்தில் தூத்துக்குடி (95.58%), 6வது இடத்தில் அரியலூர் (95.40%), 7வது இடத்தில் ஈரோடு (94.43%), 8 வது இடத்தில் திருச்சி (94.28%), 9வது இடத்தில் திருநெல்வேலி (94.19%), 10வது இடத்தில் தென்காசி (94.12%) ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி (மேகனா இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) மாணவி ஹர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தையும் ஜெயஸ்ரீ 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர். பள்ளிக்கு வந்த மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஹர்ஷினி மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவி ஜெயஸ்ரீ ஆகியோருக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பள்ளி முதல்வர் பார்த்திபன் பள்ளிக்கு பெருமை தேடி தந்த இரண்டு மாணவிகளையும் அழைத்து சென்று முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்து பாராட்டு தெரிவித்தார். மாணவியின் ஆசிரியர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது அனைவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி மருத்துவருக்கு படிக்க உள்ளதாக தெரிவித்தார்.