10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்களுக்கு கடைசி முறையாக சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்ற சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடைபெற உள்ள மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு ( செய்முறைத் தேர்வுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் மட்டும்) / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear)/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து, சிறப்பு தக்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறப்பு தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்:
ஏற்கனவே 22.12.2025 முதல் 08.01.2026 வரையிலான தேதிகள் மற்றும் தக்கல் முறையில் 02.01.2026 மற்றும் 10.01.2026 தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் பயன் அடையும் வகையில் சிறப்பு வாய்ப்பாக மீளவும் 10.022026 மற்றும் 11.02.2026 ஆகிய இரு நாட்கள் மட்டும் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் நேரில் செல்ல வேண்டும்.
இரண்டாம் முறையாக வாய்ப்பு
இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பு இரண்டாம் முறையாக தனித்தேர்வர் நலன் கருதி வழங்கப்படுகிறது.
ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
எங்கே விண்ணப்பிக்கலாம்?
கீழ்க்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் மட்டும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்டம் - விண்ணப்பிக்க வேண்டிய அதே உதவி இயக்குநர் அலுவலகம்
தென்காசி - திருநெல்வேலி
மயிலாடுதுறை, காரைக்கால் - நாகப்பட்டினம்
திருப்பத்தூர், ராணிப்பேட்டை - வேலூர்
புதுச்சேரி - கடலூர்
செங்கல்பட்டு - காஞ்சிபுரம்
கள்ளக்குறிச்சி - விழுப்புரம்
தேர்வுகள் எப்போது?
மார்ச்/ ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























