முகநூல் நண்பர்கள் மூலம் முகம் தெரியாதவர்களுக்கு உதவி... ஃபேஸ்புக்கை குட்புக் ஆக்கிய ஆசிரியர் பழனிக்குமார்!
தென்காசி அருகே 3 பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடும் மூத்த தம்பதிக்கு ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் உதவிபெற்று, வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர்.
தென்காசி அருகே 3 பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடும் மூத்த தம்பதிக்கு ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் உதவிபெற்று, வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர். அத்துடன் மாதாமாதம் மளிகை பொருட்களுக்கும் நண்பர் மூலம் உதவி வருகிறார்.
திருநெல்வேலி, கிருஷ்ணாபுரத்தில் உள்ள திருநாவுக்கரசு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பழனிக்குமார் எனபவர் பணியாற்றி வருகிறார். இவர் தொழில்நுட்பத்தை உதவும் கரங்களாக மாற்றி வருகிறார். மாணவர்களின் கற்றல், பள்ளியின் நிலை, தேவைகள், தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை தினந்தோறும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்கிறார். கிடைக்கும் பணத்தில் செய்த உதவிகளைத் தொகுத்து, நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறி அதை ஃபேஸ்பிக்கில் பதிவிடுகிறார்.
அஞ்சல் அலுவலகம், மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கு மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று, அங்குள்ள தினசரி நடைமுறைகளைக் காண்பிக்கிறார். கரும் பலகையில் எழுதிக் கற்பிப்பதைவிட, களத்துக்கு அழைத்துச் சென்று நேரடியாக மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்.
10 ரூபாய் ஊக்கத்தொகை
ஆசிரியர் பழனிக்குமார் கிருஷ்ணாபுரம் அஞ்சலில் இருந்து, கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையைப் பாராட்டி, 10 ரூபாய் ஊக்கத் தொகையை மணியார்டர் மூலமாகத் தமிழகம் முழுவதும் அனுப்பி வருகிறார்.
இதற்கிடையே தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி- கோபால் தம்பதிக்கு ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் உதவிபெற்று, வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
யார் இந்த தம்பதி?
கருப்பாயி- கோபால் தம்பதியின் மகள் ஜெயா வறுமை மற்றும் கடன் காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார் . 3 பெண் குழந்தைகளை வளர்க்க முடியுமா என்னும் அச்சத்தில் ஜெயாவின் கணவர் முத்தையாவும் தற்கொலை செய்து கொண்டார்.
மன நோயாளியான கணவர், குழந்தைகளாக இருக்கும் 3 பேத்திகளை வைத்துக்கொண்டு மலைத்து நின்றார் கருப்பாயி. வீட்டு வேலைகள் செய்தும், துணிகளைத் தேய்த்துக் கொடுத்தும் குழந்தைகளைக் காப்பாற்ற முடிவு செய்தார். கிடைக்கும் பணத்தை வைத்து 3 பெண் குழந்தைகளையும் படிக்க வைத்தார்.
மூத்த பேத்தி பானுமதி புளியங்குடி ஆர்சி பள்ளியில், 7ஆம் வகுப்பு படிக்கிறார். சொக்கம்பட்டி ஆர்சி தொடக்கப் பள்ளியில் 2ஆவது பேத்தி அனுஷ்கா 5ஆம் வகுப்பும், 3ஆவது பேத்தி முத்து லட்சுமி 3ஆம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்களின் நிலை குறித்து ஃபேஸ்புக் மூலம் ஆசிரியர் பழனிக்குமார் அறிந்துள்ளார்.
அதற்குப் பிறகு நடந்ததை அவரே சொல்கிறார்.
''இந்த 3 மாணவிகளும் படிப்பது வேறு பள்ளி என்றாலும், அனைவரும் மாணவர்களே என்று யோசித்து, அவர்களை நேரில் சென்று பார்த்தேன். பழுதடைந்த ஓட்டு வீட்டில் வசித்தனர். அவர்களின் நிலை கண்டு உதவ எண்ணினேன். முதற்கட்டமாக தண்ணீர் பிரச்சினை இருந்தது. மூத்தவராகவும் குழந்தைகளாகவும் இருந்ததால், அவர்களால் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுக்க முடியவில்லை.
தங்களுக்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருப்போம் என்றார் கருப்பாயி பாட்டி. அவரின் விருப்பப்படியே திருநாவுக்கரசு பி.எஸ்.பள்ளி ஃபேஸ்புக் பக்கம் வழியாக உதவி கேட்டு பதிவிட்டேன். ஃபேஸ்புக் நண்பர்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாயை வழங்கினர்.
அந்த பணத்தை நான் பணியாற்றும் பள்ளியின் செயலர் செல்லம்மாள் மற்றும் பள்ளிக்கல்வி உறுப்பினர் ரங்கநாயகி முன்னிலையில் கருப்பாயி பாட்டியிடம் வழங்கினோம். மேலும் அந்த குழந்தைகளுக்குத் தேவையான ஆடைகள், மிக்ஸி, கிரைண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், மளிகைச் சாமான்களை வழங்கினோம். போர் போடும்போது உடனிருந்து கவனித்தேன்... மூன்று குழந்தைகளும் துறுதுறுவென வேலை பார்த்தது என்னை ஆச்சரியமடையச் செய்தது'' என்று வியக்கிறார் ஆசிரியர் பழனிக்குமார்.
படிப்பில் சிறந்துவிளங்கும் குழந்தைகள்
7ஆம் வகுப்பு படிக்கும் பானுமதி யோகா, சிலம்பு மற்றும் கராத்தே உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று வருகிறார். வகுப்பில் 2 அல்லது 3ஆவது இடத்தைப் பிடித்து வருகிறார். தொடர்ந்து படிக்கவும் குழந்தைகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வீடு கட்டிக் கொடுக்கும் எண்ணம் எப்படி வந்தது என்றும் பேசுகிறார். ''மழை பெய்தால் ஒழுகும் நிலையில் இருந்த அவர்களின் வீட்டுக்கு ஓடு மாற்றித் தருகிறேன் என்றேன். வேண்டாம் தம்பி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ 2.17 லட்சம் மதிப்பில் வீடு கட்ட ஆர்டர் வந்துருக்கு.. அதுகூட இன்னும் கொஞ்சம் பணம் கிடைச்சால் ஓரளவுக்கு 5 பேரும் தங்கற அளவுக்கு வீட்டைக் கட்டிக்கலாம் என பாட்டி கேட்டார்.
புளியங்குடியைச் சார்ந்த சமூக சேவகரும் பில்டிங் காண்டிரக்டருமான ஸ்டீபன் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். கருப்பாயி பாட்டி வீட்டிற்கு அழைத்து வந்து ரூ.4,17000 மதிப்பில் வீடு கட்டத் திட்டமிட்டோம் . பிரதமர் திட்ட நிதி ரூ 2.17 லட்சம் போக, மீதம் 2 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. ஃபேஸ்புக் மூலம் கோரிக்கை விடுத்து, பணம் திரட்டினோம்..
ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் ரூ 1,30,000 மற்றும் நதி அறக்கட்டளை சார்பில் ரூ 26,000 மதிப்பில் செங்கல், இராஜபாளையம் பகிர்ந்து அமைப்பு மூலம் 50 மூட்டை சிமெண்ட், சென்னை விக்னேஷ் கொடுத்த ரூ.5,000, அந்தோணி ரூ.5,000, சாதனை இந்தியர் வீரபுத்திரன் வழங்கிய தரை செங்கல் மற்றும் துபாய் பி்ரபு ரூ 26,000 என அனைவரின் முயற்சியில் பணம் பெற்று, வீடு கட்டிக் கொடுத்தோம். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அண்மையில் புதுமனை புகுவிழா நடந்து முடிந்த நிலையில், 3 பெண் குழந்தைகள் மற்றும் கருப்பாயி பாட்டியை காரில் அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுத்தேன். சென்னையைச் சேர்ந்த ஃபேஸ்புக் நண்பர் ரங்கராஜன் ஸ்ரீதர், மாதம் மாதம் 1000 ரூபாய் அனுப்பி வருகிறார். கடந்த 2 வருடங்களாக உதவி செய்து வருகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு, குழந்தைகளுக்குப் பிடித்த தின்பண்டங்கள், தேவைப்படும்போது அரிசி வாங்கி கொடுப்பேன். வேறு உதவிகளையும் செய்து வருகிறோம். உதவும்போது கிடைக்கும் உவகைக்கு எல்லையே இல்லை. அதை அனுபவித்தால்தான் தெரியும்'' என்று புன்னகைக்கிறார் ஆசிரியர் பழனிக்குமார்.
இல்லாதவர்க்குச் செய்யும் உதவி சங்கிலித் தொடராய் நீளட்டும்..!