TN Budget 2024: மத்திய அரசுப்பணி; 1000 மாணவர்களுக்கு உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி- விவரம்
Tamil Nadu Budget 2024: மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி வழங்கப்படும்.
மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும், தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உணவு, தங்கும் வசதியோடு 6 மாத பயிற்சி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
''மத்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7,500 ரூபாய் மற்றும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
ஆறு மாத காலப் பயிற்சி
இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்''.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.