12th Result 2024: சென்னையில் ஒரே ஒரு அரசு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி - கல்வியாளர்கள் பெரும் வேதனை
சென்னையில் செயல்படும் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விகிதம் கடந்தாண்டை விட நடப்பாண்டு அதிகரித்துள்ளது.
சென்னையில் செயல்படும் அரசு பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விகிதம் கடந்தாண்டை விட நடப்பாண்டு அதிகரித்துள்ளது.
ஒரே ஒரு அரசுப்பள்ளி:
தமிழ்நாடு, புதுச்சேரியில் 8 லட்சத்துக்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் எழுதிய 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்தமாக 94.56% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கிட்டதட்ட 40, ஆயிரத்து 410 பேர் தோல்வியடைந்துள்ளனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 532 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் அதில் 2,478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளிகள் மட்டும் 397 ஆகும். ஆனால் தலைநகர் சென்னையில் ஒரே ஒரு அரசுப்பள்ளி மட்டும் 100% தேர்ச்சி பெற்றுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேர்ச்சி விகிதம்:
சென்னை மாநகராட்சியில் உள்ள 35 மேல்நிலைப் பள்ளிகளில் 2 ஆயிரத்து 858 மாணவிகள், 2 ஆயிரத்து 140 மாணவியர்கள் என மொத்தம் 4998 பேர் தேர்வு எழுதினர். அவற்றில் 4355 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 87.13 ஆகும். இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி 0.27 சதவிகிதம் அதிகரித்துள்ளது தேர்வு எழுதியவர்களில் 56 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பூங்கோதை 600க்கு 578 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மட்டும் 100% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் மேற்கு மாம்பலம் அப்பாசாமி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பளியும், 3ஆம் இடத்தில் திருவான்மியூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 4ஆம் இடத்தில் ஷெனாய் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியும், 5வது இடத்தில் கொளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும் பிடித்துள்ளது.
தனி கவனம்:
இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்த முதல் 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் நிகழ்ச்சி வேறொரு நாளில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும் வரும் காலங்களில் மாணவர்களிடையே தனி கவனம் செலுத்தி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 12th Result District Wise: பிளஸ்-2 ரிசல்ட் .. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்.. முதல், கடைசி இடம் யாருக்கு?