சேலம் பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் மறுப்பு: பரபரப்பு குற்றச்சாட்டு!
சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியரும் பதிவாளருமான தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்ய துணை வேந்தர் மறுப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியரும் பதிவாளருமான தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்ய துணை வேந்தர் மறுப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
கணிதத் துறைப் பேராசிரியராக இருந்து, கணினி அறிவியல் துறையிலும் பணிபுரிந்து வந்தவர் தங்கவேலு. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டபோதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.
என்ன குற்றச்சாட்டுகள்?
தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவதில் ஆகியவற்றில் தங்கவேலு நிதி முறைகேடு செய்ததாகவும் கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அதேபோல, அளவுக்கு அதிகமாக கணினிகள் வாங்கி, அதிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு, அவுட்சோர்சிங் பணிகளுக்கான ஆள் தேர்வில் மோசடி என பதிவாளர் தங்கவேலு மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் குவிந்தன.
அதேபோல உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் தடையை மீறி கணினி அறிவியல் துறையில் பணி நியமனம், ஒரே ரசீதுக்கு இருமுறை பணம் ரசீது, ஒரே நிறுவனத்தில் அறைகலன் கொள்முதல், வை – ஃபை மற்றும் கணினி உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றில் செய்த முறைகேடுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து பணி ஓய்வை நிறுத்தி வைத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை வேந்தருக்கு உயர் கல்வித்துறை பரிந்துரை செய்தது. எனினும் அரசின் பரிந்துரையை ஏற்று, துணை வேந்தர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதனால் பதிவாளர் பல்கலைக்கழகத்தில் வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தங்கவேலுவைப் பணியிடை நீக்கம் செய்ய துணை வேந்தர் மறுப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
மிகப் பெரிய குற்றம்
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘’குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது என்று சொன்ன பிறகும் அதை மதிக்காமல், துணை வேந்தரே பதிவாளரைப் பணியில் நீட்டிக்க வைப்பது மிகப் பெரிய குற்றம். தமிழக அரசும் ஆளுநரும் துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க, உத்தரவு கொடுங்கள். ஆசிரியர் சங்கம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது‘’ என்று தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை. தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சக்திவேல் கூறும்போது, ‘’பதிவாளரின் குற்றங்களுக்குத் துணை வேந்தரும் உடந்தை என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழக அரசும் ஆளுநரும், துணை வேந்தரையே பணி நீக்கம் செய்ய வேண்டும். அவரே ஏகப்பட்ட புகார்களுக்கு உள்ளானவர்தான்‘’ என்று சக்திவேல் தெரிவித்துள்ளார்.
பதிவாளர் தங்கவேலு பிப்ரவரி 29ஆம் தேதி அன்று பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.