Education Scholarship: முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தேவையும் தகுதியும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ரூ.12 லட்சம் பெறுமானமுள்ள கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதி ஆகும்.
இதுகுறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் சந்திர மவுலி தெரிவித்து உள்ளதாவது:
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கும் உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, மொத்தத்தில் ரூ.12 லட்சம் பெறுமானம் உள்ள உதவித் தொகைகள், அவரவர் தகுதிக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும்.
படிப்பில் சிறந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன் பெறும் வகையில் , 2024-2025 கல்வி ஆண்டுக்கான உதவித் தொகைகளை கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை வழங்க உள்ளது.
முக்கிய நிபந்தனைகள்
* 2024 - 2025ஆம் தல்வி ஆண்டில் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குரிய சான்றிதழ் (Bonafide Certificate) பெற்றிருக்க வேண்டும்.
* பிளஸ் ஒன், பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராய் இருக்க வேண்டும்.
* பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு எனில் கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்த பட்சம் 80 சதவீதம் (சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
* ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் குறைவான வருட வருமானம் உடைய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, ப்ரிண்ட் செய்யவம்.
* விண்ணப்பப் படிவத்தை மாணவர் தமது கைப்பட எழுதி முழுமையாகப் பூர்த்தி செய்யவும்.
* விண்ணப்பத்தில் கோரப்படாத சான்றிதழ்களை அனுப்புதல் கூடாது.
* சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கள் மட்டுமே அனுப்பவும். “உண்மை நகல்” என்று எழுதி கையெழுத்திடவும்.
* தபால் மூலமே விண்ணப்பத்தை அனுப்பவும். கூரியர் அனுப்புவதைத் தவிர்க்கவும்.
* தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும். மற்றபடி கடிதப் போக்குவரத்து கிடையாது.
* சான்றிதழ் நகல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
* உதவித் தொகைகள் பெற மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அறங்காவலர்கள் முடிவே இறுதியானது.
விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com இணையதளத்திலிருந்து டவுன் லோட் செய்துகொள்ளலாம். குறிப்பாக https://prod-qt-images.s3.amazonaws.com/kalki-pdf/Free-read/Kalki+Trust+Application+-+2024-2025.pdf என்ற இணைப்பில் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் அனுப்ப கடைசி தேதி ஜூலை 31, 2024.
கூடுதல் தகவல்களுக்கு: www.kalkionline.com