School Grant: ஹேப்பி நியூஸ்.. அரசுப்பள்ளிகளில் அதிரடி.. ரூ.119 கோடி நிதி; ஆசிரியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை..
அரசுப் பள்ளிகளில் கழிப்பறை தூய்மை, தண்ணீர் வசதி, மழைக்கால பாதுகாப்புப் பணிகள் மற்றும் பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.119.27 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 37,387 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை தூய்மை, தண்ணீர் வசதி, மழைக்கால பாதுகாப்புப் பணிகள் மற்றும் பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.119.27 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2022-2023 ஆம் நிதியாண்டில் மாநிலத் திட்ட இயக்குநர் அரசு தொடக்க, நடுநிலை, மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை அளித்துள்ளார். இதுதொடர்பாகக் கூறப்பட்டிருப்பதாவது:
* பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையில் 10% முழு சுகாதார செயல்திட்டஇனங்களான பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத் தூய்மை, சுகாதாரமாக பராமரித்தல், கை கழுவும் வசதி ஏற்படுத்துதல், தூய்மையான குடிநீர், மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு, குறிப்பாக கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்துதல் வேண்டும்.
* மாணவர்கள் முறையாக கழிப்பறைகளை பயன்படுத்துவதை உறுதி செய்தல் வேண்டும்.
* கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வாங்குதல் வேண்டும்.
* தினமும் கழிப்பறைகளை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்வதை உறுதி செய்தல்.
* குறைந்த எண்ணிக்கையிலான கழிப்பறைகள் இருந்தால், பாதுகாப்பை அனுமதிக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.
* கழிவு நீர்த்தொட்டி பழுது பார்த்தல் மற்றும் சுத்தம் செய்தல் தண்ணீர் வசதிக்கான குழாய்கள் பழுது பார்த்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிப்பறையை மாற்றுத் திறனாளிகள் பன்படுத்தும் விதமாக கைப்பிடிகள் தரை ஒடுகள், கழிப்பறை கோப்பைகள் மற்றும் விவரப் பலகைகள் அல்லது குறியீடுகள் அமைக்க பயன்படுத்த வேண்டும்.
* இதற்காக ஒரு ஆசிரியர் தலைமையிலான குழுவினை அமைத்து பார்வையிட்டு பதிவேட்டில் தினமும் பதிவு செய்ய வேண்டும். குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக் காட்டுதல் வேண்டும். இதனை ஒவ்வொரு நாளும் பள்ளி தலைமையாசிரியர் பார்வையிட்டு கையொப்பமிட வேண்டும்.
* மாணவர்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து மாதம் ஒருமுறை விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் வாரம் ஒருமுறை காலை வழிபாட்டில் இதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
* பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான மின்கட்டணம், இணையம், ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்கு இந்நிதியினைப் பயன்படுத்துதல் வேண்டும்.
* அரசு பள்ளிக் கட்டிடங்களின் கட்டமைப்பு வசதிகளான சுற்றுச்சுவர், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் ஆகியவற்றை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் தூய்மை இந்தியா திட்டத்தினை ஊக்குவித்திடவும் இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும்.
பள்ளி மேலாண்மைக்குழு வழியாக செலவிடுவதற்கான நெறிமுறைகள்
* ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேடு பள்ளித் தகவல் பலகையில் ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகை பெறப்பட்ட விவரம் ஆகியவற்றைத் தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும்.
* கோவிட் 19 சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமி நாசினியை நுகர்பொருள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
* 31.12.2022 டிசம்பர் 2022க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
* 15.12.2022-க்குள் கட்டிட பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
* பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் செலவின விவரத்தை EMIS தளத்தில் அவ்வப்போது பதிவு செய்தல் வேண்டும்.
இவ்வாறு மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.