அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
சென்னை கோட்டூர் புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகமானது கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாசகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னை கோட்டூர் புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகமானது கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது தரைத்தளம் மற்றும் எட்டு மாடிகளை உள்ளடக்கிய நிலையில் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட நூலகமாகும். சுமார் 8 ஏக்கரில் 6.25 லட்சம் புத்தகங்களைக் கொண்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரே நேரத்தில் 1250 வாசகர்கள் அமரும் வகையிலான வசதிகளைக் கொண்டது. இப்படிப்பட்ட நூலகம் கடந்த திமுக ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படும். புத்தகம் படிக்கும் பிரிவு இரவு 9 மணி வரை செயல்படும்.
வெளியூர் வாசகர்களுக்கு சிக்கல்
இப்படியான அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது அதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் முகவரியைக் கொண்ட ஆதார் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பிற அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் நூலக உறுப்பினராகும் வசதி உள்ளது. அதேசமயம் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த வாசகர்கள் உறுப்பினராக வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையொப்பமிட்ட முகவரி அங்கீகார சான்று சமர்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அண்ணா நூற்றாண்டு நூலக ஆண்டு உறுப்பினர் கட்டணம் வெறும் ரூ.200 தான் உள்ளது. அதேசமயம் நோட்டரி பப்ளிக் சான்றிதழுக்காக ரூ.500 வரை செலவழிக்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த சான்றிதழுக்காக அதிக அளவில் பணம் கேட்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது நியாயமற்ற செயல்முறை என வாசகர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். எனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைப் போல தங்களுக்கும் ஆதார் அல்லது ஆவண அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
போட்டித்தேர்வுக்கு தயாராகும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள விடுதிகள், பணம் செலுத்திப் பெறும் தங்குமிடங்கள் அல்லது தனி நபர் அறைகளில் தங்குவதால், அவர்களிடம் உள்ளூர் முகவரிச் சான்று இருப்பதில்லை. உறுப்பினர் அட்டை இதனால் கிடைக்காமல் போவதால் புத்தகங்களை எடுத்து செல்ல முடிவதில்லை. அதை படிக்க பல கிலோமீட்டர் தூரம் பயணித்து வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















