New Education Policy: புதிய கல்விக் கொள்கை தாய் மொழி கல்வியை ஊக்கப்படுத்தும்.. புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை பேச்சு!
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் புதுச்சேரி முதலமைச்சர் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறார் என்று கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்- ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் உயர்கல்வி & தொழிற்கல்வி இயக்ககம் சார்பில், தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூன்றாம் ஆண்டு விழா கருவடிக்குப்பம், காமராசர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார். முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறைச் செயலர் ஜவஹர், பள்ளிக் கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.
ஆளுநர் தமிழிசை பேச்சு :-
முதலமைச்சர் கல்வித்துறையில் ஏற்கனவே பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். இன்று புதிய கல்விக் கொள்கையை எந்தவித சிரமமும் இல்லாமல் நிறைவேற்ற முடிவதற்கு புதிய கல்விக் கொள்கையை ஏற்பதற்கு ஏற்கனவே புதுச்சேரி தயாரான கட்டமைப்பில் இருந்ததுதான் காரணம்.
புதிய கல்விக் கொள்கை
இன்றை கல்வி மாணவர்களை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு கொண்டு வர வேண்டும் என்ற மிகப்பெரிய நோக்கத்தோடு புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை பல மாற்றங்களை கொண்டு வந்து பல ஏற்றங்களை கொடுப்பதாக இருக்கிறது. அதனால் புதிய கல்விக் கொள்கையை தாய்மொழிக் கல்வியை முதலில் ஊக்கப்படுத்துகிறது.
தொடக்க கல்வி:
தொடக்க காலத்தில் தாய்ப்பால் மட்டுமே தரப்படும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதைப்போல தாய் மொழியில் தொடக்க கல்வி பெறும் குழந்தைகள் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். தமிழில் கற்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்லிக் கொடுக்கிறது. இதுவரை மற்றொரு மாநிலத்தின் கல்விக் கொள்கையை பின்பற்றி வந்தோம். புதுச்சேரியில் உள்ள அத்தனை மாணவர்களும் மிகச்சிறப்பானவர்களாக மாற வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வியை கொடுப்பதுதான் புதிய கல்வி கொள்கை.
சமச்சீர் கல்விக் கொள்கை யாருக்கும் சாமான கல்வியை தரவில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி, சீரான கல்வியைத் தருவதுதான் புதிய கல்விக் கொள்கை. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் புதுச்சேரி கல்வி கொள்கையை விமர்சனம் செய்திருக்கிறார். தமிழைப் பறித்து விட்டார்கள் என்று சொல்லுகிறார். சிபிஎஸ்சியில் கல்வித் திட்டத்தில் தமிழ் மொழி உள்பட 22 மொழிகளில் தாய்மொழிக் கல்வி ஊக்கப்படுத்தப்படுகிறது.
முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையோடு கல்வி மேம்படுத்தி இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது கால்நடை மருத்துவ கல்லூரி புதுச்சேரியில் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தார். இன்று உலக அளவில் கால்நடை மருத்துவத்திற்கான தேவை அதிகமாக இருக்கிறது என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் புதுச்சேரி முதலமைச்சர் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறார் என்று கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அமைச்சரவையில் முதலமைச்சர் கல்வித் திட்டத்திற்கு தேவையானவற்றை செய்யும்போது ஆளுநராக ஒப்புதல் தருவேன்.
வாட்டர் பெல்
காலை உணவு திட்டத்தை புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. முதலமைச்சர் ஏற்கனவே காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். புதிய கல்விக் கொள்கை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என்று கூறியது. சிறிய சிறிய மாற்றங்கள் நல்ல மாற்றத்தை எற்படுத்தும். மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தண்ணீர் தாக்கத்தைப் போக்க “வாட்டர் பெல்“ முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அது மாணவர்களின் தண்ணீர் தாக்கத்தை தணிக்கிறது.
புதுச்சேரி கல்வி, மருத்துவத்துறை
புதுச்சேரியை பொருத்தமட்டில் நாம் கல்வியில் முன்னேறி வருகிறோம் இதை அறியாமல் தமிழகத்தில் இருந்து வருபவர்கள் சிபிஎஸ்சி பாடத்தை பின்பற்றி வருவதை விமர்சனம் செய்வதை ஒப்புக்கொள்ள முடியாது. இந்திய அளவில் புதுச்சேரி கல்வி, மருத்துவத்துறைகளில் ஆறாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது எனறு கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது.
கல்வி, மருத்துவம், பொருளாதாரக் குறியீடுகளில் பாரதப் பிரதமரின் தனிப்பட்ட பொருளாதார பிரிவு ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கருத்துக்கணிப்பில் அடிப்படை வசதிகள் கொண்ட மாநிலங்களில் புதுச்சேரி முதல் இடத்தில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவை அனைத்தும் இந்த ஆட்சியால் தான். அதனால் அதற்கு உறுதுணையாக இருக்கிறேன். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ அதை மக்கள் நலன் சார்ந்து ஒப்புக்கொண்டு கோப்புகளில் கையெழுத்து இடுகிறேன். இங்கு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமூகமான உறவை குலைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.
பழைய கல்விக் கொள்கையால் இன்று உள்ள குழந்தைகளை சமாளிக்க முடியாது
ஆசிரியப் பெருமக்கள் முழுமையான பயிற்சி எடுக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. முன்பு, பல புத்தகங்களில் இருந்து கருத்துக்களை எடுத்து குழந்தைகள் படிப்பதற்கு ஆசியர்கள் கொடுத்தார்கள் இன்று சூழ்நிலை அவ்வாறு இல்லை. இன்றைய குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். பழைய கல்விக் கொள்கையால் இன்று உள்ள குழந்தைகளை சமாளிக்க முடியாது. ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை சொல்கிறது.
எந்த பாடத்தை எடுத்து படித்தாலும் பரவாயில்லை விரும்பின நேரத்தில் வேறு பாடங்களை எடுத்து படிக்கலாம் என்ற வாய்ப்பினை புதிய கல்விக் கொள்கை தருகிறது. அறிஞர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்துக்களை பெற்றுதான் புதிய கல்விக் கொள்கை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். நிகழ்ச்சியில் புதுச்சேரியில் கல்வி முன்னேற்றம் குறித்து கையேட்டினை ஆளுநர், முதல்வர் இணைந்து வெளியிட்டனர்.