NEET Protest: வெடிக்கும் விவகாரம்; நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு அதிர்வலை, இந்தியா முழுவதும் பரவி இருப்பதாகவும் தேர்வை எதிர்த்து ஜூன் 24 ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் திமுக மாணவரணிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஜூன் 24-ல், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’நீட் தேர்வு என்பதே சமூகநீதி, சமத்துவம், சமவாய்ப்பு, ஏழை எளிய மாணவர்களுக்கு பாதிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு போன்ற காரணங்களுக்காகத்தான் ஆரம்ப நாள் முதலே தமிழ்நாடு முதலமைச்சர் மிகவும் அழுத்தம் திருத்தமாக நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்.
திமுக மாணவர் அணி 2017 முதல் பல்வேறு தொடர் போராட்டங்களையும், தமிழ்நாட்டிலுள்ள அத்தனை முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மூலம் பல்வேறு விவாதங்கள், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என அனைத்து அறப்போராட்டங்களையும் மாணவர் அணி முன்னெடுத்து நடத்தி உள்ளது.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த நீட் தேர்வை எதிர்த்தும், அதனை தமிழ்நாட்டிலிருந்து நீக்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமைகளையும், அவர்கள் இழக்கும் வாய்ப்பை பெற்றுத் தரவும் போராடி வருகிறார். அவரது வழிகாட்டுதலோடு, திமுக இளைஞர் அணியுடன் மாணவர் அணியும் இணைந்து மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் உண்ணாநிலை போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது.
நீதிபதி ஏ.கே. ராஜன் குழு அறிக்கை
திமுக ஆட்சி அமைந்த உடன், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து, நீட் தேர்வினால் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தது தி.மு.க.
அந்த குழுவின் பரிந்துரையின்படி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் தரப்பிலிருந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது வரை காத்திருப்பில் உள்ளது.
பா.ஜ.க. அரசு நீட் தேர்வினை 2017-இல் கொண்டு வந்தது முதல் தி.மு.க. கடுமையாக எதிர்த்து வந்தது. தமிழ்நாட்டிலுள்ள முற்போக்கு சிந்தனை கொண்ட அத்தனை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது. அப்போதெல்லாம் பா.ஜ.க. அரசு தி.மு.க. மட்டும்தான் நீட் தேர்வை எதிர்கிறது என்றும்; தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்கிறது என்றும் விமர்சித்து வந்தது. தி.மு.க.வின் போராட்டங்களை விளம்பர அரசியல் என்றெல்லாம் சொல்லி குற்றம் சாட்டியது. ஆனால், இன்று நீட் தேர்வில் உள்ள மோசடிகள் மற்றும் குளறுபிடிகளை உணர்ந்த பா.ஜ.க.வை சேராத அரசியல் கட்சிகள், பிற மாநில அரசுகள், ஏன் ஒட்டுமொத் இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை கடுமையாக எதிர்க்க தொடங்கி விட்டனர். நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது.
நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீட் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து, திமுக மாணவர் அணி சார்பில் வரும், 24.06.2024 அன்று காலை 09.00 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’.
இவ்வாறு தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் அறிவித்துள்ளார்.