National Award for Teachers 2024: தேசிய நல்லாசிரியர் விருது; ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி? முழு விவரம்
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக உயர் கல்வி அமைச்சகம் சார்பில் பொறியியல் மற்றும் டிப்ளமோ, கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான விருது அழைப்பு விடுக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
* மாநில அரசு, யூனியன் பிரதேசப் பள்ளி ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
* மத்திய அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள், ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
* சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பள்ளி ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
* எனினும் குறைந்தது 10 ஆண்டுகள் அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஒப்பந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் யாரும் டியூஷன் எடுத்துக்கொண்டு இருக்கக் கூடாது.
முக்கியத் தேதிகள்
இதுகுறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கூறியுள்ளதாவது:
மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடிதத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவர்தம் விவரங்களை நேரடியாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் 27.06.2024 முதல் 15.07.2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், கீழ்க்கண்டவாறு மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக் குழுவிற்கு தேர்வு பட்டியலை 25.07.2024 தேதிக்குள் இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும். மாநிலப் பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட ஆட்சியரின் பிரிதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரையும் உட்படுத்தி மாவட்ட தேர்வுக் குழுவினை அமைக்க வேண்டும்.
மாவட்ட நிலையில் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை பரிசீலித்து, ஒரு மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து, மாநிலத் தேர்வுத் குழுவிற்குப் பரிந்துரைக்க வேண்டும்.
மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மாநிலப் பிரதிநிதியாக செயல்படுவார்.
மேலும், மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் சார்ந்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெற்று, அவரை மாவட்டத் தேர்வுக்குழு உறுப்பினராக உட்படுத்தி, தேசிய நல்லாசிரியர் விருதிற்கான மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து தேசிய நல்லாசிரியர் விருதிற்கான நல்லாசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பணியினை 25.07.2024 மாலை 05 மணிக்குள் முடிக்க வேண்டும்.
மேலும், மாவட்டங்களில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதிற்கான ஆசிரியர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு, எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு: https://nationalawardstoteachers.education.gov.in/