Madras University Free Education: ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி: என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?- சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
Madras University Free Education Scheme: அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட மாணவர்கள் இலவசக் கல்வித் திட்டத்தில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்து படித்துப் பயன்பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
’’ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010- 11ஆம் கல்வி ஆண்டு முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் (2024- 25) கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ன தகுதி?
மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பம், தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை?
முதல் பிரிவில் பெற்றோரை இழந்த, ஆதரவற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல இரண்டாவது பிரிவில் முதல் தலைமுறை மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், மூன்றாம் பாலின மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அதேபோல 3ஆவது பிரிவில் மெரிட் அடிப்படையில் முக்கிய பாடங்களில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு சீட்டுகள் ஒதுக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற வகையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
இலவசக் கல்வித் திட்டம் குறித்து விரிவாக அறிய https://exam.unom.ac.in/CBCS2425/UnomFreeEducation/download/tamil.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: www.unom.ac.in