JACTO GEO Protest: ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் வாபஸ்: திடீர் அறிவிப்பு- என்ன காரணம்?
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நாளை அடையாள வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நாளை அடையாள வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2017 முதல் பொதுக் கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராடி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டம், இழந்த சரண் விடுப்பை மீட்டெடுப்பது, தமிழக அரசில் 3.5 இலட்சத்திற்கு மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
என்னென்ன கோரிக்கைகள்?
1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
காலவரையின்ற முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தமைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள்- அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும்.
2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாளை வேலை நிறுத்தப்போராட்டம்
இந்த நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நாளை ( பிப்.15) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவது என்றும் பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை அரசு கவனத்துடன் பரிசீலிக்கும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். எனினும் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்தது.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபடுவோரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்தித்தனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எனினும் போராட்டம் தற்காலிகமாகவே வாபஸ் பெறப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.