Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
நெட்வொர்க்கிங் என்பதைத் தேவைக்கான ஒரு செயலாக மட்டும் பார்க்காமல், உண்மையான உறவை வளர்க்கும் நோக்கில் அணுக வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஜென்-இசட் (Gen Z) தலைமுறைப் பணியாளர்களில் 83 சதவீதத்தினர் ஆன்லைனில் தங்களது துறை சார்ந்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளத் தயங்குவதாக லிங்க்ட்இன் நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதாக நினைத்துக்கொள்வார்களோ என்ற கவலை மற்றும் இயல்பாக இல்லாமல் செயற்கையாகத் தெரிவோமோ என்ற சந்தேகம் ஆகியவையே இந்தத் தயக்கத்திற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
லிங்க்ட்இன் நிறுவனத்தின் எடிட்டோரியல் மற்றும் கிரியேட்டர் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவர் நிரஜிதா பானர்ஜி இதுகுறித்துப் தனது பதிவில் விளக்கியுள்ளார். தனது ஆரம்பக்காலப் பணி அனுபவத்தைப் பகிர்ந்த அவர், மூத்த அதிகாரிகள் மற்றும் பிற குழுவினரிடம் பேசுவதற்கு முன்பு தான் பல மணிநேரம் ஒத்திகை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நெட்வொர்க்கிங் என்ற வார்த்தைக்கு தவறான பிம்பம் இருப்பதாகவும், அதனை உறவுகளை உருவாக்குதல் என்று அழைப்பதையே விரும்புவதாகவும் அவர் கூறினார்.
துறை சார்ந்த நிபுணர்களுடன் தொடர்பில் இல்லாமல் போனால், மதிப்புமிக்க ஆலோசனைகள், புதிய அறிமுகங்கள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
நெட்வொர்க்கிங் என்பதைத் தேவைக்கான ஒரு செயலாக மட்டும் பார்க்காமல், உண்மையான உறவை வளர்க்கும் நோக்கில் அணுக அவர் 5 எளிய வழிகளைப் பரிந்துரைத்துள்ளார்:
- பொதுவான விஷயங்களில் தொடங்குதல்: உங்களுடைய அதே விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது உரையாடல்களை எளிதாக்கும்.
- கனெக்ட் செய்வதற்கு முன் பின்தொடருதல்: உங்களுக்குப் பிடித்த வல்லுநர்கள், நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கருத்துகளைப் புரிந்துகொள்ள, அவர்களை முதலில் ஃபாலோ செய்யுங்கள்.
- சிறிய உரையாடல்கள்: ஒரு பதிவுக்கான லைக், கமெண்ட் அல்லது ஒரு சிறிய கேள்வி கேட்பதன் மூலம் ஒருவருடனான தொடர்பைத் தொடங்கலாம்.
- தேவைக்கு முன்னதாகவே உறவை வளர்த்தல்: வேலை தேடும் சூழ்நிலை வரும்வரை காத்திருக்காமல், முன்கூட்டியே துறை சார்ந்தவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- உதவ முன்வருவார்கள் என நம்புதல்: அனுபவமிக்க வல்லுநர்கள், இளம் பணியாளர்கள் நினைப்பதை விட அதிக ஆலோசனைகளை வழங்கவும் உதவவும் தயாராகவே இருப்பார்கள் என நம்புங்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















