டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு- வெளியான அறிவிப்பு!
ஆசிரியர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தவறாக உள்ளீடு செய்து சமர்ப்பித்திருப்பின் அவற்றை திருத்தம் செய்து மீள சமர்ப்பிக்கும் வசதி EMIS தளத்தில் 29.07.2025 முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், ஆன்லைனில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாரத முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். இராதா கிருஷ்ணன் பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 5-ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ,ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை, ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
என்னென்ன பரிசு?
அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான “டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்பட்டு ரூ.10.000/- ரொக்கப் பரிசும், ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப் படியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், ஆன்லைனில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மேலும் கூறி உள்ளதாவது:
’’2025-ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், EMIS இணைய தளம் வாயிலாக 20.07.2025 முதல் 03.08.2025 வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டு இருந்தது.
1180 விண்ணப்பங்கள் பதிவு
இந்த நிலையில் இதுவரை 38 மாவட்டங்களில் இருந்து 1180 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, 42 விண்ணப்பங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
தற்போது இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தவறாக உள்ளீடு செய்து சமர்ப்பித்திருப்பின் அவற்றை திருத்தம் செய்து மீள சமர்ப்பிக்கும் வசதி EMIS தளத்தில் 29.07.2025 முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி கடைசி
எனவே இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருப்பின் அதனை சரி செய்து 03.08.2025க்குள் முழுமையான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.






















