மாணவர்களின் கவனத்திற்கு... உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற்பிரிவுகள் உங்களுக்காக காத்திருக்கு!!!
பயிற்சியில் சேருபவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளான விலையில்லா சீருடை, சைக்கிள், பாட புத்தகம், வரைப்படக் கருவி, மூடுகாலணி, மாத உதவித்தொகை வழங்கப்படும்.

தஞ்சாவூர்: மாணவர்களே உங்களின் கவனத்திற்கு... தஞ்சாவூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. அதுமட்டுமில்லை இதற்காக உதவும் வகையில் சேர்க்கை உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளது.
2025-ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், திருவையாறு மற்றும் ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை மூலமாக பயிற்சியாளர்கள் சேர்க்கப்படவுள்ளனர். உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற்பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. இந்நிலையத்தில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு நீங்கள் உங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், புகைப்படம் போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 8ம் வகுப்பு கல்வித்தகுதிக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு 8ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் Debit Card, Credit Card, Net Banking, G-Pay வாயிலாக விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து அதே நாளில் சேர்க்கை ஆணை வழங்கப்படும். இந்நிலையத்தில் பயிற்சியில் சேருபவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளான விலையில்லா சீருடை, சைக்கிள், பாட புத்தகம்,வரைப்படக் கருவி, மூடுகாலணி, மாத உதவித்தொகை ரூ. 750 மற்றும் தமிழ்புதல்வன் (ஆண் பயிற்சியாளர்கள்), புதுமைப்பெண் திட்டத்தில் (பெண் பயிற்சியாளர்கள்) ரூ.1000 வழங்கப்படும்.
பயிற்சி முடித்தபின் வளாக நேர்காணல் மூலம் தொழிற்பழகுநர் பயிற்சி மற்றும் வேலை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொண்டு உடனே சேர்க்கை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது 9486592295, 9840950504, 9442220049 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.





















