Dhorra Mafi: ஆசியாவிலேயே அதிக கல்வியறிவு விகிதம்… வீட்டுக்கு ஒரு அரசு அதிகாரி… வியக்கவைக்கும் கிராமம்!
இக்கிராமம் பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை வழங்கியுள்ளது. இந்த கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 75 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள கிராமமாக இந்தியாவில் உள்ள உத்தரபிரதேசத்தின் தோரா மாஃபி கிராமம் உள்ளது.
இந்தியாவின் கட்டமைப்பு
இந்தியா அதன் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு ஆகியவற்றிற்காக உலகம் முழுவதும் பிரபலமான ஒரு நாடாகும். அதோடு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் அறியப்படும் இதனை, நிர்வகிப்பது குறித்து பல நாடுகள் அதிசயிக்கின்றன. அத்தனை மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்லுதல் என்பதற்கு தேவையான கட்டமைப்பு குறித்து பலரும் வியந்து பார்க்கின்றனர். அதிலும் முக்கியமாக அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வது என்பது இவ்வளவு பெரிய நாட்டில் மிக மிக இன்றியமையாதது. இப்போது கிடைத்த தகவல்களின்படி, ஆசியாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள கிராமமாக இந்தியாவில் உள்ள ஒரு கிராமம் உள்ளது.
தோரா மாஃபி கிராமம்
தோரா மாஃபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிராமம் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளது. அலிகார் அதன் பூட்டுத் தொழில்களுக்கும் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கும் பெயர் பெற்ற மாவட்டமாகும். 2002-ஆம் ஆண்டில், இந்த கிராமம் ஆசியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற கிராமமாக லிம்கா புத்தகத்தில் பட்டியலிடப்பட்டது. இந்த கிராமம் பல விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை நாட்டிற்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 75 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்கு ஒரு அரசு அதிகாரி
24 மணிநேர மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி, ஆங்கில வழி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நாட்டின் மிகவும் வளர்ச்சியடைந்த கிராமங்களில் ஒன்று தோரா மாஃபி ஆகும். இந்த கிராமத்தின் மக்கள் தொகை சுமார் பத்தாயிரம் முதல் பதினொன்றாயிரம் பேர் வரை இருக்கலாம் என்கிறது அறிக்கை. கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் உள்ளனர், ஏனெனில் கிட்டத்தட்ட 80% குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒரு அதிகாரியாவது பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கிராமம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ளது. அந்த பல்கலைக்கழகம் கிராமவாசிகளின் உயர் கல்விக்கு உதவியாக உள்ளது.
கிராமத்தில் இருந்து பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள்
இந்த கிராமத்தைச் சேர்ந்த ஃபைஸ் முஸ்தபா ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார், டாக்டர் ஷதாப் பானோ AMU-இல் பேராசிரியராக இருந்தார், மேலும் டாக்டர் நைமா குரேஜும் அந்த பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார். ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சிராஜும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான். இக்கிராம மக்கள் விவசாயத்தை தவிர்த்து கல்வியை நம்பி வாழ்கின்றனர். கிராமத்தின் தலைவரான டாக்டர் நூருல் அமீனின் கூற்றுப்படி, இந்த கிராமத்தின் சிறந்த விஷயங்களில் ஒன்று குடியிருப்பாளர்களிடையே சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஆகும். பல்வேறு சமூகங்கள் மற்றும் குழுக்களை சேர்ந்தவர்கள் இங்கு பல ஆண்டுகளாக பாகுபாடின்றி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி, இக்ரா பப்ளிக் பள்ளி, எம்.யு கல்லூரி மற்றும் மூன் லைட் பள்ளி ஆகியவை உள்ளன.