சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்; விபத்தை தடுக்க ஒளிரும் பெல்ட்டுகள்- அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல் யோசனை
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாடுகளின் மீது ஒளிரும் பெல்ட்களை மாட்டி விடலாம் என தென்குவளவேலி அரசுப்பள்ளி மாணவர்கள் களப்பணி செய்து யோசனை தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாடுகளின் மீது ஒளிரும் பெல்ட்களை மாட்டி விடலாம் என்று தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பணி செய்து யோசனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சமூகம் சார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எரிபொருள்களைக் கொண்டு குட்டி ராக்கெட் செய்து பறக்கவிட்டனர். அடுத்து அருகில் உள்ள புராதனமான கோயிலுக்கு சென்று கல்வெட்டுகளை படித்து கோயிலின் பழமை பற்றி அறிவித்தார்கள். தற்போது முக்கியமான பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு ஒன்றை முன் வைத்திருக்கிறார்கள்.
சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் நேர்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துகளும் உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ரேணுகா தலைமையில் ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் மீது, ஒளிரும் பட்டைகளை மாட்டிவிடலாம். அல்லது பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்டலாம். இதன் மூலம் விபத்தை தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
இது குறித்து ஆய்வு செய்த மாணவர் குழுவினர் கூறும்போது, சாலையில் இருபுறமும் உள்ள புளிய மரங்கள் மீது ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருப்பதைப் போலவும் சாலையின் நடுவே பிரதிபலிப்பான்கள் ஒட்டி இருப்பதைப்போலவும் சாலையில் திரியும் மாடுகள் மீது ஒளிரும் பட்டைகளை (florescent belts) மாட்டி விடலாம்.
அல்லது பிரதிபலிப்பான் அட்டைகளை (Reflector stickers) ஒட்டலாம் . வாகனங்களின் ஒளி மாடுகள் மீது மாட்டப்பட்டுள்ள பெல்ட்டுகள் மீது அல்லது ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் மீது பட்டு பிரதிபலிக்கும். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக வாகனங்களை ஓட்ட முடியும். விபத்தையும் தடுக்க முடியும்' என்றனர்.
இது குறித்து ஆய்வு வழிகாட்டி ஆசிரியர் ரேணுகா கூறும்போது, ‘’சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது என்பது ஒரு பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மாடுகள் மீது மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். எங்கள் பள்ளி மாணவர்கள் கொண்டு வந்திருக்கும் தீர்வு மிகவும் உபயோகமானதாக இருக்கும். மாணவர்களின் ஆய்வு முடிவுகளை அறிக்கையாக தயார் செய்து மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்பி இருக்கிறோம். மேலும் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் இதை சேவைப்பணியாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என்பது எங்கள் விருப்பம்' என்று தெரிவித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ) ஆதலையூர் சூரியகுமார், ’’ஒரு திட்டம் என்பது மிக குறைந்த செலவில் பெரிய செயல்களை செய்து முடிப்பதாக வேண்டும். அப்படித்தான் மாணவர்களின் ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன. இங்கே சிறிய செலவில் மனித குலத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்று மாணவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த ஆய்வில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் விஷ்வா, கனிஷ்கர், ரித்தீஷ், மாணவிகள் மீனரோசினி, பிரியங்கா, தீபிகா, சஃபியா சிரின், சுபிகா அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்’’ என்று தெரிவித்தார்.