CBSE: சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று தொடக்கம்; ஆதாரை கட்டாயமாக்கிய அரசு!
சிபிஎஸ்இ மாணவர்களின் விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான இணைய சேவையை இன்று தொடங்கிய நிலையில் மாணவர்கள் லாகின் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையில் ஓஎஸ்எம் எனப்படும் டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டதில், குளறுபடிகள் எழுந்துள்ளதாகக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் காணும் பணி, மறு மதிப்பீட்டுப் பணிகள் ஆகியவை இன்று (ஜூன் 2) தொடங்கி உள்ளன.
ஆதார் கட்டாயம்
இதை மேற்கொள்ள ஆதார் சரிபார்ப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத குழந்தைகள், அவர்களின் பெற்றோர், உறவினர்கள், பாதுகாவலர்களின் ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் ஆதார் எண்ணை உள்ளிடும் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும்.
ஏற்கனவே தங்கள் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த மறுமதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்கள் https://www.cbse.gov.in/newsite_old/rchk.html என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- போர்ட்டலில் உள்நுழைய மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமாக உள்ளிடப்பட வேண்டும்.
- விண்ணப்பிக்கும் செயல்முறை மற்றும் கட்டணம் செலுத்துதல் என அனைத்தும் முழுமையாக ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.
- ஆஃப்லைன் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.
- இந்த இணையதள வசதி இன்று (ஜூன் 2) தொடங்கி ஜூன் 6ஆம் தேதி நள்ளிரவு வரை செயல்பாட்டில் இருக்கும்.
கட்டணம் எவ்வளவு?
- விடைத்தாள் சரிபார்ப்பு (Verification of Issues): ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலில் உள்ள சிக்கல்களைச் சரிபார்க்க, விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
- மறுமதிப்பீடு (Re-evaluation): குறிப்பிட்ட கேள்விகளுக்கு மறுமதிப்பீடு செய்ய, ஒரு கேள்விக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கட்டணங்களை UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் வழிகளில் மட்டுமே செலுத்த முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலில் விடுபட்ட பக்கங்கள், விடுபட்ட கூடுதல் தாள்கள், வரைபடங்கள் இல்லாமை, மங்கலான பக்கங்கள் அல்லது தவறான விடைத்தாள் போன்ற குறைகள் இருந்தால் அவற்றைச் சரிபார்க்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்கள் அல்லது கேள்விகளுக்கான கோரிக்கைகளை ஒரே விண்ணப்பத்தில் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்காக ‘Freeze and Proceed to payment’ என்ற பட்டனை அழுத்திய பிறகு விண்ணப்பத்தில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என்பதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் புரிதலுக்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் சிபிஎஸ்இ தரப்பில் யூடியூப் டுடோரியல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிழையின்றி விண்ணப்பிக்குமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















