Budget 2024 Expectations: மோடி 3.0 பட்ஜெட் தாக்கல்; கல்வியாளர்கள் தரப்பு எதிர்பார்ப்பு என்ன?- ஓர் அலசல்!
Education Sector Union Budget 2024 Expectations: பாஜக தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் மத்தியக் கல்வித் துறையில் என்னென்ன இடம்பெறலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக அண்மையில் பொறுப்பேற்றது. இதற்கிடையே 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (ஜூலை 23ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்தது, பிரதமர் மோடி ஆட்சியின் மீது அதிருப்தி நிலவுவதை வெளிக்காட்டிய நிலையில், இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாஜக தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் மத்தியக் கல்வித் துறையில் என்னென்ன இடம்பெறலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
வேலை சார் கல்வி
நாடு முழுக்க வேலைவாய்ப்பின்மை என்பது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில், வேலைவாய்ப்போடு இணைந்த தொழில் சார்ந்த கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுக்க இணையத் தொடர்பு வசதிகளை மேம்படுத்துதல்
நாடு முழுவதும் இணையத் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவின் கடைசி மூலை வரை கல்வியை ஊக்குவிக்க முடியும். மாணவர்களுக்கு இணைய வசதியை அளிப்பதன் மூலம் சர்வதேசக் கல்வியும் அவர்களுக்கு சாத்தியமாகும்.
எளிமைப்படுத்தப்பட்ட கல்விக் கடன்
மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கணிசமான மாணவர் சமூகம், தங்களின் கனவுப் படிப்பைத் தொடரப் பெரும்பாலும் கல்விக் கடனையே நம்பியுள்ளது.
குறைவான வட்டி, எளிமையான வழிமுறைகள் ஆகியவற்றைக் கல்விக் கடன் வழங்கும்போது அரசு பின்பற்றினால், மாணவர் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.
லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களைக் கல்வியாளர்களுக்கு அளித்தல்
உயர் தரத்திலான கல்வியை, லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், நிதி ஒதுக்க வேண்டியதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் வகையில் அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி விலக்கு தேவை
பொதுவாக கல்வி சார் சேவைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்சி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகம் ஆகும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாணவர்களுக்கும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கும் 100 சதவீதம் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தரமான கல்வியை வழங்க வேண்டிய அரசு, அதே நேரத்தில் குறைந்த விலையிலும் வழங்க வேண்டும்.
இத்தகைய அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.