Anjaamai Review: நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
Anjaamai Review in Tamil: விதார்த், வாணிபோஜன், ரகுமான் உள்ளிட்ட பலரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது அஞ்சாமை திரைப்படம்.

கல்விக்கான ஒரு நுழைவுத் தேர்வு என்ன செய்துவிடும்? அதை எதிர்கொள்வதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம். ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை இல்லாத சூழலில், ஒரே தகுதித் தேர்வு சரியா என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைத்ததில்லை.
பொறியியல் படிக்க நடத்தப்படும் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்ய முடிந்தபோது, ஏன் மருத்துவ நுழைவுத் தேர்வை மட்டும் ரத்து செய்ய முடியவில்லை? தமிழ்நாட்டில்தானே அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன? ஏன் இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை?
ஒரே நுழைவுத் தேர்வு சரியா?
8ஆம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்குத் தனிப் பயிற்சி பெறும் மாணவரும் 12ஆம் வகுப்பு பாதியில் இருந்து பெயரளவுக்குப் பயிற்சி பெறும் மாணவரும் எப்படி ஒரே நுழைவுத் தேர்வை எழுதுவது சரியாக இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், பதிலை நாமே யோசிக்கத் தூண்டுகிறது அஞ்சாமை!
திண்டுக்கல் கிராமமொன்றில் நாடகக் கலைஞனாக இருப்பவர் சர்க்கார். தன் மகனுக்குக் கலை சார்ந்தே ஆர்வம் கிளைத்தெழுவது கண்டு, தான் உயிராக நேசிக்கும் கலைத்தொழிலைக் கைவிடுகிறார். மகன் படிப்பே, உயர்வுக்கான ஆயுதம் என்று நம்புகிறார். மகன் அருந்தவமும் அப்பாவின் ஆசையை நிராசையாக்காமல் நன்கு படிக்கிறார். மனைவி தனியார் பள்ளியில் சேர்க்கலாம் என்று கூறியும், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில்தான் தன் மகன் படிக்க வேண்டும் என்று அங்கேயே படிப்பைத் தொடர வைக்கிறார்.
10ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடிக்கும் அருந்தவம், மருத்துவர் ஆக ஆசைப்படுகிறார். 11ஆம் வகுப்பில் அருந்தவத்தின் மதிப்பெண்கள் சற்றே குறைய, முக்கிய பாடங்களுக்கு ட்யூஷன் சேர்த்துவிடுகிறார். 12ஆம் வகுப்பில் நீட் கட்டாயம் என்று அறிவிப்பு வர, பயிற்சி மையத்திலும் சேர்க்கிறார். இதெற்கெல்லாம் ஆகும் கட்டணத்துக்காக நிலத்தையே அடமானம் வைப்பவர், கடைசியில் ஆசையாய் வளர்த்த மாட்டையும் விற்கிறார்.
மாணவர் வேட்டையும் பண வேட்கையும்!
இவையெல்லாம் 90களில் ஒவ்வொரு தாய்/ தந்தையும் தன் மகன், மகளைப் படிக்கவைக்க எடுத்த முயற்சிகளை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. படத்தில் தனியார் பள்ளிகளின் மாணவர் வேட்டையும் பயிற்சி மையங்களின் பண வேட்கையும் தெளிவுறக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மகன் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சர்க்காருக்கு, அடுத்தடுத்து ஏற்படும் நிகழ்வுகள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. மாணவர்களின் தற்கொலைகள் குறித்த செய்தி, அவருக்கு அச்சத்தை ஊட்டுகிறது. நீட் தேர்வுக்குத் தேர்வு மையம் ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்ட, மகளின் சங்கிலியை அடகு வைத்துப் பணம் புரட்டி, கிளம்புகிறார்கள் சர்க்காரும் அருந்தவமும். அங்கோர் அசம்பாவிதம் ஏற்பட, அதிலிருந்து மீண்டார்களா? என்பதே அஞ்சாமை படத்தின் மீதிக் கதை. இத்தகைய காட்சிகள் அந்நியமாக இல்லாமல், அண்டை வீட்டில் நடப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திச் செல்கின்றன. அதுவும் இடைவேளைக் காட்சியில் அதிகாரியின் காலில் விழுந்து சர்ச்சார் கதறும் காட்சிகள், கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைத்துவிடும்.
அரசு அமைப்பும் எப்படி இயங்குகிறது?
இந்தியத் திருநாட்டில் கல்வி முறையும் அரசு அமைப்பும் எப்படி இயங்குகிறது, இதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா என்பதெல்லாம் இரண்டாம் பாதியில் ரகுமான் மூலம் பிரச்சார நெடி அதிகமில்லாமல் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. சில காட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தாலும் உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் படத்தோடு ஒன்ற வைத்துவிடுகின்றன.
பல்லாண்டுகளாகவே கல்வி சார்ந்து ஊடகத்துறையில் இயங்கி வருவதால், நீட் தேர்வு, அது தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாணவர்களின் தற்கொலைகள், பெற்றோர்களின் பரிதவிப்பு, பயிற்சி மையங்களின் படையெடுப்புகள், நீட் தேர்வு முறைகேடுகள், குளறுபடிகள் குறித்த செய்திகளை அன்றாடம் எதிர்கொண்டிருக்கிறேன்.
அப்போது மாணவர்கள் தொடர்பான நிறைய செய்திகளை அப்படியே கடந்துபோய்விட முடிந்ததில்லை. பதிவு செய்யும்போபோது, மனதை பாதித்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இந்த திரைப்படமும் அத்தகையதோர் அனுபவத்தைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குநர் எஸ்.பி.சுப்புராமனின் அஞ்சாமை, ஆட்சியாளர்களுக்கும் அதே தாக்கத்தை ஏற்பத்தினால், அதுவே படத்தின் வெற்றியாக இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

