Minister Kayalvizhi Selvaraj:"மாணவர்கள் அனைவருக்கும் தந்தையை போன்ற முதல்வர் கிடைத்துள்ளார்" - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
உரிமைகளை பெறுவதற்காக படிப்பு மிகவும் முக்கியம். மாணவர்கள் உங்களுடைய உரிமைகளை தெரிந்துகொள்ள படியுங்கள் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு.
சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் "தொட்டுவிடும் தூரத்தில்" இலக்கு என்ற தலைப்பில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம், கோவை, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கல்வி, பொருளாதாரம், அடிப்படை தேவை உள்ளிட்ட அனைத்தும் மற்ற சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அவை அனைத்தும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று தான் துறை உருவாக்கப்பட்டது. பழங்குடியினர் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெற்றோர்களின் கனவையும் மாணவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுகின்ற பொறுப்பு ஆசிரியர்கள் கையில் இருக்கிறது. ஒழுக்கத்துடன் கூடிய கல்விதான் மாணவர்கள் வாழ்க்கையை உயர்த்தும். கல்வி, ஒழுக்கம் இரண்டும் வேண்டும், மூன்றாவதாக கடினமுயற்சி வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெறமுடியும். நான் முதல்வன் திட்டம் கல்வியையும், தொழிலையும் கற்றுக் கொடுப்பதோடு கூடுதலான திறமை மூலமாக உங்களுடைய வாழ்க்கையை வளமானதாக அமைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது தான் முதல்வன் திட்டம், மாணவர்கள் அனைவருக்கும் தந்தையை போன்று முதல்வராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிடைத்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் மூலமாக மருத்துவ மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் உள்நாட்டில் 20 லட்சம் ரூபாய் வரை, வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு 30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருப்பது போன்று தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இல்லை. அதனால் பெற்றோரும் மாணவர்களும் கல்வி குறித்த விழிப்புணர்வை பெற்றிட வேண்டும், மேலும் பல்வேறு திட்டங்களை அரசு வழங்குகிறது அதனை மாணவர்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு தேர்வு முடிவில் 8 சதவீதம் மட்டும் உயர்வு பெற்றிருந்தோம், வரும் கல்வியாண்டில் அது அதிகரிக்க வேண்டும். அதற்கு மாணவர்களுக்கு ஆசிரியர்களும் உதவியாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், இருப்பினும் இந்த அளவிற்கு வெற்றியடைந்துள்ளோம் என்றால் அதற்கு ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். கல்விக்காக கூடுதலாக செலவு செய்யும்போது, அதன்மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் படிப்பு மட்டும்தான், அதில் முழுமையாக கவனத்தை செலுத்தவேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை வார்டன்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் படிக்கிறார்களா என்பதை பார்த்து படிப்பிற்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும். கல்வி என்பது அறிவை வளர்ப்பதற்காகவும் பொருளாதாரத்தை ஈட்டுவதற்காகவும் மட்டுமல்ல நமது உரிமைகளை பெறுவதற்காக தான். அதனால் படிப்பு மிகவும் முக்கியம். மாணவர்கள் உங்களுடைய உரிமைகள் என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவது படிக்க வேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் கல்வி இருந்தால் மட்டுமே அதனை சரி செய்ய இயலும், கல்வி எளிதாக கிடைக்கும் பொழுது மாணவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் அவர்கள் மாணவர்கள் அனைவரும் மேம்பாடு அடையமுடியும். வாய்ப்புகள் நிறைய உள்ளது அதை பயன்படுத்தினால் மாணவர்கள் வாழ்க்கையில் மேம்பாடு அடைவீர்கள்” என்று பேசினார்.