Online Rummy Textbook : 6, 10-ஆம் வகுப்பு பள்ளி புத்தகங்களில் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கம்; என்ன காரணம்?
6 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி புத்தகங்களில் சீட்டுக் கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
6 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி புத்தகங்களில் சீட்டுக் கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களும் ஆசிரியர்கள், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூல் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம் சீட்டுக்கட்டு உதாரணத்துடன் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் புள்ளியியலும் நிகழ் தகவும் என்ற தலைப்பின்கீழ் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் இடம்பெற்றிருந்தன.
6ஆம் வகுப்பில் முழுக்கள் என்ற தலைப்பிலான கணிதப் பாடம், முழு எண்களைக் கொண்டு கூட்டல் மற்றும் கழித்தலை விளையாட்டு வடிவத்தில் கற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டது. இதில், எந்த எண்ணுடன் எந்த எண்ணைக் கூட்டுவது, எந்த எண்ணை கழிப்பது என்பதை சீட்டுக்கட்டுகள் மூலமாக கற்றுத் தர வேண்டியதில்லை என்று அரசியல் தலைவர்களும் ஆசிரியர்கள், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இந்த கல்வியாண்டு முதல் கணக்கு பாடங்களில் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 10ஆம் வகுப்பு பாட நூலில் சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்களில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக புதிதாக உதாரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு கூடையில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிற பூக்களில், வண்ணப் பூக்களைத் தனித்தனியே தேர்வு செய்வதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்று கேள்வி மாற்றியமைப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் பாடப் புத்தகத்தில் புள்ளியியலும் நிகழ் தகவும் என்ற பாடம் இடம் பெற்றுள்ளது. இதில் நிகழ் தகவு பிரிவில் சம வாய்ப்பு சோதனை என்ற விளக்கத்தில் மூன்று எடுத்துக்காட்டு கணக்குகள் இடம் பெற்றுள்ளன.
ஒரு நாணயத்தை சுண்டுதல், பகடைக் காய்களை உருட்டுதல் மற்றும் 52 சீட்டுகளில் பிரித்து எடுத்தல் என்ற எடுத்துக்காட்டுக்களுடன் கணக்குகள் உள்ளன. இதில் சீட்டுக் கட்டு கணக்கும் அதற்கான கேள்விகளும் இடம் பெற்ற பகுதி மட்டும் புதிய பாட புத்தகத்தில் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நாணயத்தை சுண்டுதல், பகடைக் காய்களை உருட்டுதல் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
என்ன காரணம்?
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த சில ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது. அது நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தற்போதைய திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.