வருமானத்துக்கு அதிகமாக 355% சொத்துக்குவிப்பு; ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் மீது வழக்குப் பதிவு- பரபரப்புப் பின்னணி!
தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மற்றும் அவரின் குடும்பத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக 355% அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மற்றும் அவரின் குடும்பத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக 355% அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தெரிய வந்துள்ளது.
2012 முதல் 2016ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இயக்குநர் ஆகவும் இருந்தவர் ராமேஸ்வர முருகன். குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநராக 2012 ஏப்ரல் 1 முதல் 2012 மே 10ஆம் தேதி வரை பதவி வகித்தார். அதேபோல, தொடக்கக் கல்வி இயக்குநராக 2012 மே 12 முதல் ஜூலை 31 வரை பதவியில் இருந்தார்.
தொடர்ந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி வரை ராமேஸ்வர முருகன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநராகப் பதவி வகித்தார். தொடர்ந்து மாநிலக் கல்வி பள்ளி வாரியத்தின் இயக்குநராக 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் 25ஆம் தேதி வரை ராமேஸ்வர முருகன் பணி புரிந்தார்.
ராமேஸ்வர முருகன், உறவினர்கள் மீது வழக்குப் பதிவு
இந்த நிலையில் அவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் ராமேஸ்வர முருகன், அவரின் மனைவி அகிலாண்டேஸ்வரி, தாய் மங்கையற்கரசி, தம்பி சின்னப்பா பழனிசாமி, மாமனார் அறிவுரை நம்பி, மாமியார் ஆனந்தி உள்ளிட்டவர்களின் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 3 கோடியே 89 லட்சத்து 29 ஆயிரத்து 263 ரூபாய் சேர்த்தது தெரிய வந்தது. அதாவது, வருமானத்துக்கு அதிகமாக 355% அளவுக்கு (354.66) சொத்துக் குவிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து ராமேஸ்வர முருகனுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்படும். நேரில் அழைக்கப்பட்டு அவர் விசாரிக்கப்படுவார். அதன்பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.