Thoothukudi Book Fair : '11 தினங்கள் நடைபெற உள்ள தூத்துக்குடி புத்தக திருவிழா.. 120 அரங்குகள்..' ஆட்சியர் செந்தில்ராஜ் அளித்த தகவல்..
புத்தகத் திருவிழாவையொட்டி கோவில்பட்டி கி.ரா. மணிமண்டபத்தில் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்டம் தொடர்பான படைப்புகள் குறித்தும் கருத்தரங்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வித்ய பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப் பள்ளி மற்றும் ஆரம்ப கால பயிற்சி மையத்தின் 20-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தொழிற்பயிற்சிக்கான கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திறந்து வைத்து சிறப்பு பள்ளி மாணவர்களுடன் உரையாடினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், “கோவில்பட்டி வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை அவர்களே சுயமாக உருவாக்கியுள்ளார்கள். இப்பள்ளியில் பயின்று பயிற்சி பெற்ற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களால் தற்போது வாழ்க்கையில் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் முடிகிறது. அதுமட்டுமல்லால் கைவினைப்பொருட்கள், கீ செயின் மற்றும் விளையாட்டு பொருட்களை மாணவர்கள் தயாரிக்கிறார்கள். மேலும் பினாயில் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்
”தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4-வது புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா 21.04.2023 முதல் 01.05.2023 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத்திருவிழாவுடன் சேர்ந்து ஏப்ரல் 28, 29, 30, மற்றும் மே 1-ம் தேதிகளில் நெய்தல் கலைத்திருவிழாவும் நடைபெறவுள்ளது. கலைத்திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமின்றி தென் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக்கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளார்கள். அதனுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. புத்தகத்திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும், புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த புகைப்படங்களின் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சிக்கு 18 வயதிற்குட்பட்ட கலைஞர்களின் படைப்புகள் ஒரு பிரிவாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற உள்ளது. சிறந்த புகைப்படங்களை www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த புகைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.50,000 மற்றும் ஆறுதல் பரிசாக 10 புகைப்படங்களுக்கு தலா ரூ.5,000 வீதமும் வழங்கப்படவுள்ளது.
புத்தகத் திருவிழாவையொட்டி கோவில்பட்டி கி.ரா. மணிமண்டபத்தில் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்டம் தொடர்பான படைப்புகள் குறித்தும், திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில், சுதந்திரப் போராட்டத்தில் ஊடகத்துறையின் பங்களிப்பு தொடர்பாகவும் கருத்தரங்கங்கள் மற்றும் விவாதங்கள் நடைபெறுகிறது. மண் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சிகள் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் 6 தினங்கள் நடைபெறவுள்ளது. மேலும் புத்தக வாசிப்பின் அவசியம் மற்றும் நமது கலாச்சாரங்கள் குறித்து உரையாடல்களும் நடைபெறவுள்ளது.
இந்த மணிமண்டபங்களில் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று மண் சார்ந்த மரபுகளை அறிந்து பயன்பெற வேண்டும். மேலும் தூத்துக்குடி புத்தகத்திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 10 அரங்குகள் என மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்படுகிறது. மேலும், சிறார்களுக்கான விளையாட்டு அம்சங்கள் மற்றும் சிற்றுண்டி வகைகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெற வேண்டும்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

