(Source: ECI/ABP News/ABP Majha)
தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்... நையப்புடைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.. திருவண்ணாமலையில் பரபரப்பு.!
திருவண்ணாமலையில் மரம் அறுவை இயந்திரம் திருடிய நபரை கடை உரிமையாளரும் பொதுமக்களும் சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா முன்பு செயல்பட்டு வரும் பெங்களூர் பவர் டூல்ஸ் கடையில், மர அறுவை இயந்திரத்தை திருடிய திருடனை கடை உரிமையாளரும் பொதுமக்களும் சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினரிடம் திருடிய நபரை ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை ரவுண்டானா அருகே செயல்பட்டு வரும் பெங்களூர் பவர் டூல்ஸ் கடையின் வெளியே வாடிக்கையாளர் காட்சிக்காக மரம் அறுவை இயந்திரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்து இருந்தனர்.
இந்நிலையில், கடைமூடும் நேரத்தில் கடையின் வெளியே இருந்த பொருள்களை எடுத்து கடையின் ஊழியர்கள் உள்ளே வைத்துள்ளனர். அப்போது கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்று இல்லாததை உணர்ந்து, உடனடியாக கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்தக் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் ஒருவர் மரம் அறுக்கும் இயந்திரம் திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடையின் ஊழியர்கள் மீண்டும் கடையில் திருடுவதற்கு அந்த மர்ம நபர் வருவாரா எனக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன்.15) அதே போன்று கடையில் வெளியே வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த பொருட்களை திருட அந்நபர் வந்துள்ளார். அப்போது அந்நபரை அடையாளம் கண்டு, அவரைப் பிடிக்க கடையின் உரிமையாளர் முயன்றபோது சுதாரித்து, கடை உரிமையாளரை தாக்கி விட்டு திருடிய நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.
தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் கடை உரிமையாளரும் சேர்ந்து அந்நபரை மடக்கிப் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் திருட முன்ற நபரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரில் உள்ள சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்பு என்பவர் தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரு மாதமாக இதே பகுதியில் செயல்பட்டுவரும் கடைகளில் மின்விசிறி, அரிசி, மூட்டை உள்ளிட்ட பொருள்களை அந்நபர் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அன்புவை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். திருவண்ணாமலை நகர்புறங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களையும் தற்போது வரையில் அப்பகுதி காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.