கரூரில் முதியவரின் வங்கி கணக்கில் பணம் திருடிய இளைஞர் கைது
ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறி 1.5 லட்சம் பணம் திருட்டு
திருச்சி மாவட்டம். அண்ணா நகரைச் சேர்ந்தவர் பொன்னையன் (56). இவர் சம்பவத்தன்று கரூரில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்முக்கு பணம் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு நபரிடம் தனக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுமாறு கேட்டிருக்கிறார். அந்த ஆசாமி உதவி செய்வது போல் நடித்து பொன்னையனின் ஏடிஎம் கார்டை மாற்றிக்கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
சில நாட்களுக்கு பிறகு பொன்னையனின் கணக்கில் இருந்து திருடப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் ரூபாய் 1.5 லட்சம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த பொன்னையன் இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். புகாரை ஏற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள புகையிலைப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 26) என்ற இளைஞர், பொன்னையன் ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து பன்னீர்செல்வத்தை போலீஸார் கைது செய்து காவலில் வைத்திருக்கிறார்கள்.