நடுரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! பிளேடால் கையை கிழித்து தாக்குதல்! ஷாக் சம்பவம்!
திருவண்ணாமலை அருகே கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பிய பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி இவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து இவரது தாயின் அறிவுறுத்தலின் பேரில் செஞ்சி அடுத்த பரதன் தாங்கள் கிராமத்தை சேர்ந்த சுதாகரன் வயது (33) என்பவருக்கு மாணவியை திருமணம் செய்து வைத்துள்ளனர் இதுதொடர்பாக அந்த மாணவி சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இந்த தகவல் அளித்ததன் பேரில் திருமணத்தன்று அந்த மாணவியை காவல்துறையினர் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் திருமணத்தை நிறுத்தி மாணவியை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சுதாகரனை கைது செய்தனர்.இந்நிலையில் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த சுதாகரன் மாணவி தங்கியிருந்த உறவினர் வீட்டிற்குச் சென்று மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி மாணவியை மீண்டும் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிடுவதாக கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். மேலும் கடந்த 13ஆம் தேதி பள்ளி முடிந்து மாணவி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மாணவியை கீழ்பெண்ணாத்தூர் ராயப்பேட்டை செல்லும் சாலையில் வழிமறித்த சுதாகரன் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். சுதாகரன் மறைத்து வைத்திருந்த பிளேடு எடுத்து மாணவின் இரு கைகளிலும் மற்றும் முகத்திலும் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். பின்னர் மாணவியின் கையில் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாணவியின் உறவினர்கள் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சுதாகரனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பிய பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு பாலியல் சீண்டல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது புகார் அளிக்க திருவண்ணாமலை மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் எண்கள் திருவண்ணாமலை 04175-253144 , செங்கம் - 224100 ,போளூர் -224499, ஆரணி -226684, செய்யாறு - 220620, வந்தவாசி- 227593 ஆகிய எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்