திருவண்ணாமலை: ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ற பெண்கள்! காரணம் என்ன?
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இரண்டு குடும்பங்கள் கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் வளாகத்தில் கந்து வட்டி கொடுமையில் இருந்து தங்களை காக்க கோரியும் மற்றும் நிலம் அபகரிப்பு குப்பலிடம் இருந்து தங்களது நிலத்தினை மீட்டு தரக்கோரி அடுத்தடுத்து இரண்டு குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,வேங்கிக்கால் பஞ்சாயத்து குபேர நகர்,பகுதியை சேர்நதவர் தென்றல் வயது (35) இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவரது தாயார் தேன்மொழி. இவர் இடுக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ராதிகா என்பவரிடம் கொரோனா தொற்று காலத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவசர மருத்துவ செலுக்காக சுமார் 50 ஆயிரம் ரூபாய்யை கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். இதற்காக தென்றல் வட்டியாக இதுவரை சுமார் 1.5 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
தற்போது ராதிகா வாங்கிய கடன் மற்றும் வட்டியாக மேலும் 2.5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று ஆள் வைத்து மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து இரண்டு தரப்பினரும் திருவண்ணாமலை தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் ராதிகாவிற்க்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்து செயல்படுவதாகவும் தான் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தாலுக்கா காவல்துறையினர் என்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கந்து வட்டி தொல்லையில் இருந்து என்னை மீட்டு தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த கந்து வெட்டி தொல்லையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது தாயாருடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு எற்பட்டது.
அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட பொரசப்பட்டு கிராமத்தினை சேர்ந்த கஸ்தூரி மற்றும் இவரது கணவர் சிவா மற்றும் தாயார் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சர்வே எண் 4-4 என்ற நிலத்தில் கிணறு வெட்டி மின்சாரத் துறையிடம் பூந்தோட்ட இணைப்பு வாங்கி கடந்த 2003 முதல் அனுபவித்து வரும் நிலையில், அதே கிராமத்தினை சேர்ந்த செங்கம் அதிமுக அம்மா பேரவை செயலாளர் குமார் என்பவர் இந்த நிலம் தனக்கு உரியது என்று இவர்களை மிரட்டி நிலத்தினை அபகரிக்கும் நோக்கில் முயன்றுள்ளார். மேலும் இவர் செங்கம் தாசில்தார் பாய்ச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் இவர்களின் பரிந்துரையை ஏற்க்காமல் குமாரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு குமார் பெயரில் மின் இணைப்பு மற்றும் நிலத்தினை அனுபவிக்கும் உரிமை சான்று ஆகியவற்றினை அளித்துள்ளார்.
இது குறித்து கடந்த ஒரு ஆண்டுகளாக செங்கம் வட்டாச்சியர்,கோட்டாச்சியர் ஆகியோரிடம் பல முறை மனு அளித்து எந்த வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்க்கொள்ள வில்லை என்பதால் இன்று இவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.
அடுத்துடுத்து இரண்டு குடும்பங்கள் தீக்குளிக்க முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.மேலும் தீக்குளிக்க முயன்றவர்களை காவல்துறையினர் மீட்டு அவர்களின் மீது தண்ணீர் ஊற்றி பின்னர் விசாரனைக்காக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே போன்று தொடர்ச்சியாக வாரம்தோறும் தங்களுடைய பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயல்கின்றனர். ஆனால் அவர்கள் மீது திடீரென தீப்பற்றி கொண்டால் அணைப்பதற்கு அங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு காவல்துறையிடம் எந்தவித உபகரணமும் இன்றி குறைந்த அளவே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்