Crime: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் பேங்க் பெயரில் மோசடி.. ரூ.17 கோடியை சுருட்டிய பெண் யார் தெரியுமா?
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரைச் சேர்ந்தவர் பவித்ரா. 35 வயதான இவர் பெங்களூரில் உள்ள ஆனேக்கலில் “ப்ளூ விங்ஸ்” என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
பெங்களூருவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி பெயரில் நூற்றுக்கணக்கானவர்களிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரைச் சேர்ந்தவர் பவித்ரா. 35 வயதான இவர் பெங்களூரில் உள்ள ஆனேக்கலில் “ப்ளூ விங்ஸ்” என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இவர் பெங்களூரு புறநகரில் உள்ள அத்திபெலே, ஓசூர், தருமபுரி மற்றும் கர்நாடகா மற்றும் தமிழக எல்லைக்குட்பட்ட பல கிராமங்களைச் சந்தித்துள்ளார்.
அப்போது அங்குள்ள மக்களிடம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உத்தரவின் பேரில் ரூ.17 கோடியை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தனது அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளது. என்னிடம் கடன் வாங்கினால் முழு தொகையை தரவேண்டாம். பாதியை திருப்பி தந்தால் போதும். மீதியை மானியம் வகையில் கழித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்து போட்ட கடிதம் மற்றும் பணக்கட்டுகள் அடங்கிய வீடியோவையும் காட்டியுள்ளார். அதேசமயம் கடன் கிடைப்பதை உறுதி செய்ய முன்பணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டியுள்ளனர். ஆனால் பவித்ரா சொன்னது போல கடன் கொடுக்காமலும், முன் பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்துள்ளார்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணம் கட்டிய பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்க போகிறோம் என கூறியுள்ளனர். இதற்கு உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என மிரட்டும் தொனியில் பவித்ரா பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யா நகர் காவல் நிலையத்திலும், அத்திபெலே காவல் நிலையத்திலும் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி வழக்கில் மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்ட்டதட்ட மோசடி செய்த தொகை ரூ.17 கோடி என்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே அத்திபெலே போலீசார் பவித்ரா உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு, கர்நாடகா மாநில மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.