வாடகைக்கு வீடு கொடுத்தவருக்கே விபூதி அடித்த பெண்; ஏமாந்த குடும்பம் - நடந்தது என்ன ?
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மாந்திரிகம் செய்வதாக சொல்லி பணம், நகை பறித்த பெண் கைது
புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். முருகனின் தந்தை துரைராஜன், தாய் உதயகுமாரி ஆகியோரும் உடன் இருந்தனர். கடந்த 2020 ஆண்டு முருகனின் வீட்டிற்கு சத்தியவதி என்ற பெண் வாடகைக்கு குடி வந்தார். முருகன் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்படுவதை பார்த்த சத்தியவதி, லட்சுமியிடம் பேசி பரிகார பூஜைகள் மூலம் அதனை சரி செய்து விடலாம் என்று வந்துள்ளார்.
இதனை நம்பி கணவனுக்கு தெரியாமல் லட்சுமி ஏராளமாக பணம் கொடுத்து பூஜைகளை செய்து வந்துள்ளார். இதற்கிடையே முருகனுக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரிந்து அதற்கு உண்டான மருந்து சாப்பிட ஆரம்பித்ததும் வயிற்றுவலி கட்டுக்குள் வந்துள்ளது. இதனை தனது பூஜையால் சரி செய்ததாக கூறி நம்பவைத்துள்ளார் சத்தியவதி. இதனை உண்மை என்று நம்பிய லட்சுமியின் மாமியார் உதய குமாரியோ, 79 வயதான தனது கணவர் துரை ராஜனையும் நோயின்றி நடக்க வைக்க முடியுமா என்று கேட்டுள்ளார்.
அவரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு பூஜை செய்வது போல் பாவனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சத்தியவதி, தன்னை ஒரு மாந்தீரிக வாதியாக காட்டிக்கொண்டு மிரட்டி பணம் பறிக்க தொடங்கி உள்ளார். தன்னை பற்றி வெளியில் சொன்னால் ரத்தம் கக்கி செத்துப் போவீங்க, குழந்தைகள் ஒவ்வொன்றாக இறந்து விடும் என்றெல்லாம் அடிக்கடி மிரட்டி வந்த சத்தியவதி, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணம் பறித்ததாக கூறுகின்றனர். மேலும், வீட்டில் இருந்த 37 சவரன் நகைகளை சாதுரியமாக பேசி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நோய் தீர ஒரு வருடமாக பரிகார பூஜை செய்யப்பட்ட துரை ராஜன் அண்மையில் உடல் நலக் கோளாறால் உயிரிழந்ததையடுத்து சத்தியவதி சொன்னதெல்லாம் பொய் என்று லட்சுமி குடும்பத்தினர் நம்பி உள்ளனர். அவரது அடக்கம் முடிந்தகையோடு வீட்டை பூட்டிவிட்டு நகை பணத்துடன் சத்தியவதி வீட்டை காலி செய்ததால் அவர் மீது புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் துரைராஜ் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
லட்சுமியின் மாமியார் உதயகுமாரி தன் பெயரில் இருந்த வீட்டை அடமானம் வைத்து சத்தியவதியிடம் பணத்தை கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி நைநார் மண்டபம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மந்திரவாதி சத்தியவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்