ரீல்ஸ் எடுத்தால் ஜெயில் தான்! விழுப்புரத்தில் பட்டாக்கத்தி, நாட்டு வெடியுடன் அட்டகாசம் செய்த இளைஞர்கள் கைது!
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியுடன் வீடியோ எடுத்தும், சாலையில் நாட்டு வெடி வீசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் கைது

விழுப்புரம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாக்கத்தியுடன் வீடியோ எடுத்தும், சாலையில் நாட்டு வெடி வீசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு இளைஞர்களை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ்
விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாக்கத்தியுடன் வீடியோ எடுத்தும், சாலையில் நாட்டு வெடி வீசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு இளைஞர்களை விழுப்புரம் மாவட்ட போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பட்டாக்கத்தியுடன் மிரட்டல் வீடியோ
விழுப்புரம் அடுத்த கண்டமானடி பகுதியில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜானகிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் (23) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்து, அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார், ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை இன்று கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சாலையில் நாட்டு வெடி வீச்சு
இதேபோல், வானூர் அடுத்த திருவக்கரை பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் என்ற இளைஞர், பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெடிபொருட்களைக் கொண்டு 'நாட்டு வெடி' ஒன்றைத் தயாரித்துள்ளார். அந்த வெடியை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையில் வீசி வெடிக்கச் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து "கெத்து" காட்டுவதற்காகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய இந்தச் செயல் குறித்து வானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
காவல்துறை கடும் எச்சரிக்கை
சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக (Likes & Followers) வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் வீடியோக்களைப் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.
இது குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்:
"சமூக வலைதளங்களைச் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் பயன்படுத்துபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் போலீசார் மூலம் சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















